பிரேசில் வாக்களிப்பு இயந்திரங்கள் நம்பரகமானவை அல்ல என்று தேர்தல் முடிவை எதிர்த்தார் தோற்றுப்போன பொல்சனாரோ.

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தான் ஒக்டோபர் தேர்தலில் தோல்வியடைந்ததை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்திருக்கிறார். நாட்டின் பெரும்பாலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் பதிவு நம்பத்தகாதவை என்று சுயாதினமான விற்பன்னர்கள் குறிப்பிட்டிருப்பதாக அதற்கு அவர் காரணம் காட்டியிருக்கிறார். அந்த இயந்திரங்களில் ஒரு மென்பொருள் பிழை உண்டாகியிருந்தாகியிருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

பொல்சனாரோ தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் ஆட்சியை தேர்தல் ஆணையத்தால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட எதிர் வேட்பாளர் லூலா டா சில்வாவிடம் ஒப்படைப்பதாக அறிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் பொல்சனாரோவின் சக அமைச்சர்கள், ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் தேர்தல் முடிவை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். பொறுப்புக்களை ஒப்படைத்தல் நடந்துகொண்டிருக்கிறது. 

பொல்சனாரோ ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் நாட்டின் இராணுவம் ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றவேண்டும் என்றும், பொல்சனாரோ தோற்றதை ஏற்றுக்கொள்ளலாகாது என்றும் குறிப்பிட்டுப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 

இரண்டாம் கட்டத் தேர்தலில் பாவிக்கப்பட்ட வாக்களிப்பு இயந்திரங்கள் சிலவற்றில் அடையாள எண்கள் இல்லாமல் போயிருந்தன என்பதையே பொல்சனாரோ காரணம் காட்டியிருக்கிறார். ஆனால், அது எப்படி நம்பத்தகாதவை என்பதை அவர் குறிப்பிடவில்லை. தற்போது பொல்சனாரோ குறிப்பிட்ட காரணங்கள் தேர்தல் முடிவைப் பற்றி நீதிமன்ற விசாரணை நடத்தப் போதாது என்று ஆணையம் பதிலளித்து அவர் மேலும் விபரங்கள் சமர்ப்பிக்கவேண்டும் என்று கோரியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *