தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமலே தான் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் பொல்சனாரோ.

ஞாயிற்றுக்கிழமையன்று பிரேசிலில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஜாயர் பொல்சனாரோ மயிரிழையில் தோற்றுவிட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது அவர் எவருக்கும் எதுவும் சொல்லாமலே தனது உறைவிடம் சென்றுவிட்டார். எந்தப் பத்திரிகையாளருக்கும், தனது அமைச்சர்களுக்கும் கூடத் தேர்தல் முடிவைப் பற்றிப் பேச மறுத்துவிட்டார்.

ஓரிரு வருடங்களாகவே நாட்டின் தேர்தல் முறையையும், நீதித்துறையையும் விமர்சித்து வந்தவர் பொல்சனாரோ. தேர்தல் முடிவு வந்தபின்னரும் ஏறக்குறைய இரண்டு நாட்கள் அவர் மௌனம் சாதித்து வந்தமை பற்றிப் பலரும் பல விதமாகக் கணிப்புகளை முன்வைக்க ஆரம்பித்தார்கள். 

பொல்சனாரோவின் தீவிர ஆதரவாளர்களான ஒரு சாரார் பாரவண்டியோட்டிகளாகும். அவர்கள் நாட்டின் சுமார் 20 நகரங்களில் தமது வாகனங்களைப் பிரதான வீதிகளில் நிறுத்தி மறியல் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். மேலும் சிலர் சமூகவலைத்தளங்கள் மூலம் நாடு முழுவதும் போராட்டங்களை ஆரம்பிக்குமாறு தூண்டிக்கொண்டிருந்தார்கள். முக்கிய அரசியல்வாதியான பொல்சனாரோவின் மகன், மற்றும் சில அமைச்சர்களோ பொல்சனாரோ தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்வார் என்று குறிப்பிட்டு வந்தார்கள்.

எல்லாவித கற்பனைகளுக்கும் முடிவு கட்டும்படியாக செவ்வாயன்று பிற்பகல் பொல்சனாரோ ஜனாதிபதி மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துத் தான் பதவி  விலகுவதாக அறிவித்திருக்கிறார். தேர்தலைப் பற்றியோ, அதில் லூலா டா சில்வா வென்றதைத் தான் ஏற்றுக்கொள்வதாகவோ அவர் எதுவும் குறிப்பிடவில்லை. 

சுமார் மூன்று நிமிடங்களுக்குள் தனது உரையை அவர் முடித்துக்கொண்டார். தேர்தல் காலத்தில் நாட்டின் ஜனநாயக விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை, தனது ஆதரவாளர்களை நல்ல முறையில் கையாளவில்லை ஆயினும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தான் பதவி விலகுகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *