ஒட்டாவா நகரில் ஒழுங்குகளெல்லாம் நிலைகுலைந்ததால் நகரபிதா அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறார்.
கடந்த வாரம் முதல் கனடாவின் ஒட்டாவாவில் தடுப்பூசிக் கட்டாயத்தை எதிர்க்கும் நடவடிக்கையாக “சுதந்திர வாகனத் தொடரணி” நடந்து வருகிறது. அந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பல்லாயிரக்கணக்கானோர் வாரவிடுமுறை நாட்களில் ஒட்டாவா நகரின் மையத்தை கேளிக்கைக் களமாகவும் மாற்றியிருந்தார்கள். அதனால், நகரின் போக்குவரத்து பெருமளவு வெட்டப்பட்டதாலேயே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக ஆளுனர் ஜிம் வாட்சன் தெரிவித்தார்.
“நடந்துகொண்டிருக்கும் எதிர்ப்புப் போராட்டங்கள் நகர மக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தாக மாறிக்கொண்டிருக்கிறது. அதனால் யாராவது உயிரிழக்க அல்லது காயப்பட முதல் நாம் அதை நிறுத்தவேண்டும். நிலைமையோ எங்கள் கைகளை விட்டு வேகமாக நழுவிக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்னர் நாம் கட்டுப்பாட்டைக் கைவசப்படுத்த வேண்டும்,” என்று தனது நகர்வுக்கான காரணத்தை நியாயப்படுத்திய ஜிம் வாட்சன் போராட்டக்காரர்களின் நடவடிக்கைகள் பல ஜனநாயகத்துக்கே ஆபத்தாக மாறிவருவதாகவும் குறிப்பிட்டார்.
“சுதந்திர வாகனத் தொடரணி” போராட்டக்காரர்கள் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் டுருடூ பதவி விலகவேண்டும் என்று கோரி வருகிறார்கள். பிரதமர், ஆளுனர் உட்பட கனடாவின் அரசாங்கத்தின் கொரோனாப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பெரும்பாலான மக்களின் ஆதரவு இருப்பதாகக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன.
வார இறுதி நாட்களில் கனரக வாகனங்களின் பேரணி மற்றைய நகரங்களுக்கும் பரவியிருக்கிறது. ஆனால், ஒட்டாவா போன்று பெரிய அளவிலல்ல. வீதிகளை மறிக்கும் வாகனங்களையெல்லாம் அங்கிருந்து கட்டாயமாக அகற்றப்போவதாக டொரண்டோ நகர அதிகாரம் அறிவித்திருந்தது.
ஒட்டாவா நகரிலும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் அதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆளுனர் குறிப்பிட்டிருக்கிறார். போராட்டக்காரருக்கு உதவி செய்பவர்களையும் கைதுசெய்யப்போவதாக எச்சரிக்கப்பட்டிருக்கிறது. எடுக்கவேண்டிய நடவடிக்கைகளுக்கான முழுப் பலம் தம்மிடம் இல்லையென்று ஒட்டாவாவின் பொலீஸ் அதிபர் கனடாவின் வேறு பகுதிகளிலிருந்து உதவியைக் கோரியிருக்கிறார். தவிர அரசியல்வாதிகள் மீதான மிரட்டல்களை எதிர்நோக்க அமெரிக்கப் பொலீசாருடனும், உளவுத்துறையுடனும் சேர்ந்து கனடா செயற்பட்டு வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்