ஹூத்தி இயக்கத்தினரின் யேமன் தலைநகர் மீது சவூதிய விமானங்கள் குண்டு மழை.
சுமார் ஒரு வாரமாக சவூதி அரேபியாவும், ஹூத்தி இயக்கத்தினரும் ஒருவரையொருவர் தாக்கி வருவது தொடர்கிறது. சவூதி அரேபிய அரசுக்குப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து மூன்று நாட்கள் அதற்காகப் போர் நிறுத்தமொன்றை ஹூத்தி இயக்கத்தினர் சனியன்று பிரகடனப்படுத்தியிருந்தனர். அதைப் பொருட்படுத்தாமல் சவுதி அரேபியா அவ்வியக்கத்தினர் கட்டுப்பாட்டிலிருக்கும் ஜேமனின் தலைநகர் சனாவைத் தாக்கியிருக்கிறது.
சர்வதேசப் பிரபலமான காரோட்டப் போட்டியான Formula One சவூதியின் ஜெட்டா நகரில் நடந்துவரும் தருணத்தில் அப்பந்தயங்கள் நடக்கும் இடத்தையடுத்து டசினுக்கும் மேற்பட்ட இடங்களில் காற்றாடி விமானத்தின் குண்டுகளால் தாக்கினர் ஹூத்தி இயக்கத்தினர். ஜெட்டாவிலிருக்கும் அந்த எண்ணெய் சுத்திகரிக்கும் மையத்தில் தீவிபத்துக்கள் உண்டாகின.
இரண்டு பெண்களும் ஐந்து குழந்தைகளும் சவூதி அரேபியாவின் தாக்குதலால் இறந்திருப்பதாக ஐ.நா குறிப்பிட்டிருக்கிறது. அதன் காரியதரிசி குத்தேரஸ் இரு பக்கத்தினரையும் போரின் உக்கிரத்தை அதிகரிக்கவேண்டாம் என்று வேண்டிக்கொண்டார்.
ஏழு வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் அரசியல் ஈடுபாடு யேமனில் ஆரம்பமாகியது. ஈரானின் பக்கபலத்துடன் அந்த நாட்டின் ஹூத்தி இயக்கத்தினர் சவூதி அரேபியாவையும் அதன் பக்கத்து நாடுகளையும் தாக்கி வருகின்றனர். உலகின் மிகப் பின் தங்கிய நாடாகக் கருதப்படும் யேமனில் ஆயிரக்கணக்கானோர் இப்போரினால் கொல்லப்பட்டிருக்கின்றனர். மில்லியனுக்கும் அதிகமானோர் தமது நாட்டுக்குள்ளேயே அகதிகளாகிப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். பல தடவைகளிலும் அப்போரை நிறுத்த எடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் சவூதி அரேபியா, எமிரேட்ஸ், ஈரான் ஆகிய நாடுகளின் ஜென்ம விரோதப் போக்கால் தோல்வியடைந்து வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்