அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 2,000 டொலரைத் தாண்டிவிடும் என்று கணிக்கப்படுகிறது.

ரஷ்யா – உக்ரேன் போரின் உக்கிரம் குறையாமல் தொடர்வதும், எடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை போர் நிறுத்தத்தை உண்டாக்காமல் இருப்பதும் சர்வதேச முதலீட்டாளர்கள் தமது கையிருப்பைத் தங்கத்தில் முதலீடுசெய்வதில் அதிகரிக்க வைத்திருக்கிறது. ஏற்கனவே அவுன்ஸ் 1,950 டொலராக இருக்கும் தங்கம் வரவிருக்கும் வாரங்களில் மேலும் உயரவே செய்யும் என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

ரஷ்யாவின் எரிபொருட்களை வாங்குவதைப் படிப்படியாகக் குறைக்க முடிவெடுத்திருக்கும் ஐரோப்பிய நாடுகள் அதைக் கொள்வனவு செய்ய முழுத்தடையை இன்னும் போடவில்லை. ரஷ்யாவும் அதை விற்பது தனது போர்க்காலத் தேவை என்பதால் விற்பனையை நிறுத்தவும் போவதில்லை. எனவே அடுத்த கட்டத் தடையாக ரஷ்யாவின் தங்கத்தைக் கொள்வனவு செய்யும் தடை போடப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

வெளிநாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகள் தொழில்நுட்ப ரீதியாக வெட்டப்பட்ட நிலையில், தனது எரிபொருட்களுக்கான விலையை ரூபிள்களில் தரவேண்டும் என்று ரஷ்ய அதிபரி புத்தின் கோரியிருந்தார். அதை ஐரோப்பிய அரசுகள் உதாசீனப்படுத்தப்படுத்தியதால் ரஷ்யா தன்வசமிருக்கும் தங்கத்தில் வியாபாரங்களைச் செய்யலாம் என்று கணிக்கப்படுகிறது.

2014 முதல் தனது மத்திய வங்கியில் பெரும் தங்கக் கஜானாவைச் சேர்த்து வந்திருக்கிறது ரஷ்யா. கைவசம் சுமார் 100 – 140 பில்லியன் டொலர்கள் பெறுமதியான தங்கத்தை வைத்திருக்கும் ரஷ்யா அதை வெளிநாட்டு நாணயமாக மாற்ற முடியாத நிலையில் நேரடியாக வர்த்தகத்தில் பாவிக்கலாம் என்று வங்கிகளின் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அமெரிக்காவின் மத்திய வங்கி ஏற்கனவே ரஷ்யாவுடன் தங்கத்தில் வியாபாரம் செய்யவும் தடை விதித்திருக்கிறது. அது சர்வதேச ரீதியான தடையாக அறிமுகப்படுத்தப்படும் சமயத்தில் தங்கத்தின் விலை மீண்டும் உயரலாம் என்று கணிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *