காணாமலாக்கப்பட்டோரின் விடுதலை கோரி யாழில் மாபெரும் பேரணி
தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலை கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிட நிலையத்தில் இருந்து ஆரம்பமாகிய பேரணி ஆஸ்பத்திரி வீதியின் ஊடாக யாழ்.மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
அவ்விடத்தை சென்றடைந்த பேரணி, மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள மனித உரிமை செயலகத்தில் வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினாரால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
மனித உரிமைகள் ஆணையகத்தின் உயர்ஸ்தானிகருக்கான அந்த மகஜரினை மனித உரிமை செயலகத்தின் சார்பில் அருட்தந்தையர்கள் சின்னத்துரை லீயோஆம்சொங், ம.ரெக்ஸ் மற்றும் அருட்சகோதரி அண்ரனிற்ரா மாற்கு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தாயக சமூக மட்டத்தின் முக்கிய தாக்கமாக அடையாளப்படும் இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்கள் பலரினதும் கோரிக்கை “தாம் நேரடியாகவே கையளித்த எம் உறவுகள் எங்கே” என்றவாறு அமைந்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. நீண்டகாலமாக போராட்டங்களை முன்னெடுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் மிகப்பெரியளவில் பல மக்களையும் இணைத்து பேரணியாகி தங்கள் கோரிக்கைகளை தெளிவாக சமர்ப்பித்துள்ளனர்.
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட் குறித்த பேரணிக்கு இணைந்த பல பொதுமக்களோடு,ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,சமூகபிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
தொடர்ச்சியாக தமது உறவுகளைத் தேடியலையும் மக்களுக்கான இந்த வேண்டுதலை எந்த வொரு தரப்பாகினும் கையிலெடுத்து மக்கள் பக்கம் தீர்வைக்காண முன்வர வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்: துஷி