மிச்சமிருக்கும் டிரம்ப்பின் இரண்டு வாரங்களுக்குள் ஈரானும், டிரம்ப்பும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள்?

தமது வெற்றி வீரர்களில் ஒருவராக ஈரானியர் போற்றும் காஸிம் சுலைமானியை அமெரிக்கா கொலை செய்த முதலாவது நினைவு நாளை ஞாயிறன்று அமெரிக்காவையும், டிரம்ப்பையும் திட்டியபடியே கொண்டாடினார்கள். அதையொட்டி ஈரான் அமெரிக்காவின் மீது தாக்குவதாகச் சூழுரைத்ததால் அமெரிக்க இராணுவத் தளங்கள் பிரத்தியேக கவனத்துடன் இருந்தன. 

எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காததுமன்றி ஈரானை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க விமானம்தாங்கிப் போர்க்கப்பலை அமெரிக்கா திருப்பியழைத்துக்கொள்ளவும் செய்தது.

https://vetrinadai.com/news/uss-nimitz-iran-usa/

ஆனால், நிலைமை அத்துடன் நிற்கவில்லை. பாரசீகக் குடாவுக்கு அருகே தென் கொரியாவின் கப்பலொன்றை “சுற்றுப்புற சூழலுக்கு மாசு செய்தது,” என்று காரணம் காட்டி ஈரான் கைப்பற்றித் தனது நாட்டின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றது. கப்பலில் சுமார் 7.000 தொன் எதனால் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. 

அதைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட தனது கப்பலை உடனடியாக ஈரான் விடுவிக்கவேண்டும் என்று தென் கொரியா கேட்டுக்கொண்டது. “வரும் நாட்களில் தென் கொரிய உயரதிகாரி ஒருவர் தெஹ்ரானுக்கு வரவிருக்கிறார். தென் கொரிய வங்கிகளிலிருக்கும் பல பில்லியன் ஈரானின் பணத்தைத் தருவது பற்றி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்,” என்றிருக்கிறது ஈரான். ஈரானுக்கெதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் தென் கொரிய வங்கிகள் ஈரானின் சுமார் 7 பில்லியன் டொலரை வெளியே விடாமல் வைத்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

கப்பலைக் கைப்பற்றிய ஈரானின் நடத்தையால் அமெரிக்காவை நோக்கித் திருப்பியழைக்கப்பட்டிருந்த போர்க்கப்பலை மீண்டும் பாரசீகக் கடல் பிராந்தியத்துக்குத் திரும்பும்படி அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆணையிட்டிருக்கிறார். 

டிரம்ப் எதை எப்படி எதிர்கொள்வாரென்று எவராலும் முன்கூட்டியே கணிக்கமுடியாது என்பதால் ஈரான் அளவோடு சீண்டிப் பார்க்கிறதா அல்லது வரவிருக்கும் ஜோ பைடன் அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தத் தனது கையைப் பலப்படுத்தி வருகிறதா?

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *