டிரம்ப் காலத்தில் அமெரிக்கா விலகிக்கொண்ட ஐந்து சர்வதேச அமைப்புக்கள் நாலில் அமெரிக்கா மீண்டும் சேர்ந்துவிட்டது.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பிலும், சுற்றுப்புற சூழல் பேணலுக்கான பாரிஸ் ஒப்பந்தத்திலும் மீண்டும் சேர்ந்துகொண்ட அமெரிக்கா மனித உரிமைகள் பேணும் அமைப்பிலும் பங்களிக்கச் சமீபத்தில் முடிவெடுத்திருந்தது. அதையடுத்து வெள்ளியன்று ஈரானுடனான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் சேர்ந்துகொள்வதற்கான பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்தது. 

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ராயேல் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மனித உரிமைகள் மீறலுக்கான விசாரணைகளை ஆரம்பித்ததால் கோபமுற்ற முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அந்த அமைப்பைப் புறக்கணித்ததுடன் அதன் இரண்டு முக்கிய விசாரணையாளர்கள் மீது தடைகளையும் விதித்திருந்தார். குற்றவியல் நீதிமன்றத் தலைமை வழக்கறிஞர் பதூ பென்சூடா, குற்றவியல் விசாரணைகளின் தலைவர் பக்கீஸோ மொகோசொக்கோ ஆகிய அந்த இரண்டு பேர் மீதான தடைகளும் நீக்கப்படுவதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அந்தோனி பிளிங்கன் அறிவித்திருக்கிறார். 

“சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் சில நடவடிக்கைகள் மீது எங்களுக்குத் தொடர்ந்தும் எதிர்க் கருத்து இருக்கிறது. பல விடயங்களைப் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே தீர்த்துக்கொள்ளவேண்டும்,” என்று குறிப்பிட்டிருக்கும் பிளிங்கன் மீண்டும் அந்தக் குற்றவியல் நீதிமன்ற அமைப்பில் அமெரிக்கா சேர்ந்துகொள்வதைப் பற்றி எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை. 

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் பற்றி பில் கிளிண்டன், பரக் ஒபாமா உட்பட்ட அவருக்குப் பின்னர் வந்த ஜனாதிபதிகள் எல்லோருமே விமர்சனம் தெரிவித்திருந்தார்கள். டிரம்ப்பின் காலத்தில் அது பற்றிக் கடுமையான விமர்சனங்கள் பகிரங்கமாகத் தெரியப்படுத்தப்பட்டுப் புறக்கணிக்கும், தண்டிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *