பாராளுமன்ற தில்லுமுல்லுகளின் பின்னர் டுவிட்டரில் மென்மையாகப் பேசியது டிரம்ப் தானா?
சில நாட்களுக்கு முன்னர் வாஷிங்டனில் டிரம்ப் தனது ஆதரவாளர்களைப் பேரணிக்கு அழைத்து அவர்களைத் திரண்டெழுந்து போராடும்படி உசுப்பி விட்டதன் பின்னர் அவர்கள் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் புகுந்து பெரும் களேபரத்தில் ஈடுபட்டது தெரிந்ததே.
விளைவுகளைக் கூட்டிக்கழித்துப் பார்த்ததில் பாராளுமன்றத்தினுள் தாக்குதல்களை நடாத்தியவர்களில் நாலு பேரும், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் போராடிய பொலிஸாரில் ஒருவரும் இறந்திருக்கிறார்கள். பேரணியிலிருந்து விலகி வெள்ளை மாளிகைக்குப் போன டிரம்ப் விளைவுகளை அறிந்தும் வன்முறையில் ஈடுபட்டவர்களைத் “தேசியத்தின் பாதுகாவலர்கள்” என்றெல்லாம் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
அடுத்த நாள் ஒரு டுவிட்டர் வீடியோ மூலம் டிரம்ப் ‘வன்முறையிலிறங்கிச் சட்டம் ஒழுங்கை மீறியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்றும் தான் அமைதியாகப் பதவி விலகிப் புதிய ஜனாதிபதி பதவியேற்பதற்காகத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தார். குறிப்பிட்ட அந்த வீடியோ பற்றி வெவ்வேறு தொனிகளில் டிரம்ப்பின் ஆதர்ச ஆதரவாளர்களிடையே விமர்சிக்கப்படுகிறது.
நடப்பவைகள் எல்லாவற்றையுமே ஏதோ திட்டமிட்ட சதி தமக்கெதிராக நடப்பதாகக் குறிப்பிட்டுவரும் டிரம்ப் (conspiracy theory) ரசிகர்கள் குறிப்பிட்ட வீடியோக்கள் செயற்கை அறிவூட்டப்பட்ட தொழில்நுட்பம் மூலம் உண்டாக்கப்பட்டவை என்று அதில் தெரிவது உண்மையான டிரம்ப் இல்லை என்கிறார்கள்.
ஒரு பகுதியினர் டிரம்ப் தங்களையெல்லாம் உசுப்பேத்தித் தூண்டிவிட்டிப் பின்னர் சட்டம் ஒழுங்கு பற்றிப் பேசுவதைப் பற்றி வெவ்வேறு விதமான வகையில் கோபத்துடன் விமர்சித்து வருகிறார்கள். ஒரு நாளுக்கு முன்னர் “நான் தோல்வியடையவில்லை, பதவி விலகமாட்டேன்” என்று சூழுரைத்த டிரம்ப் அடுத்த நாளே பூனை போன்று “வரவிருக்கும் ஜனாதிபதியிடம் எல்லாவற்றையும் அமைதியாக ஒப்படைப்பேன்,” என்று குறிப்பிட்டதை அவர்களால் ஜீரணிக்க இயலவில்லை.
அவர்களைத் திருப்திப்படுத்தவோ என்னவோ டிரம்ப் மீண்டும் பழையது போலவே டுவிட்டரில் தேர்தல் முடிவு சூறையாடப்பட்டது, வெற்றி பெற்றது தானே, போன்றவைகளை எழுதியும் தனது ஆதரவாளர்களை மீண்டும் சீண்டியும் பதிந்தவைகளை அந்த நிறுவனம் அகற்றியதுடன், நிரந்தரமாகவே டிரம்ப்பின் கணக்கைப் புடுங்கிவிட்டது. வேறொரு கணக்கு மூலம் டிரம்ப் தனது டுவீட்டுகளைத் தொடர அக்கணக்கும் முடக்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்