ஈரானியர்கள் மீது வெளிநாட்டு நிறுவனங்கள் கொவிட் 19 மருந்துகளைப் பரிசீலிக்க அனுமதிக்க மாட்டோம் – ஜனாதிபதி
“வெளிநாட்டு நிறுவனங்கள் எங்களுக்கு இலவசமாக தடுப்பு மருந்தைத் தர முயல்வதன் காரணம் எமது மக்களைப் பரிசோதனைச்சாலை எலிகளாக்கவே,” என்று குறிப்பிட்டு வெளிநாட்டுத் தடுப்பு மருந்துகளுக்குத் தடை விதித்திருக்கிறார் ஜனாதிபதி ஹசன் ரூஹானி.
“எமது மக்களுக்குத் தேவையான தடுப்பு மருந்துகளை நாங்களே வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்வோம்,” என்று குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி அந்த நாடுகள் எவையென்பதைத் தெரிவிக்கவில்லை. “பிரிட்டனும், அமெரிக்காவும் நம்பத்தகாத நாடுகள். எங்களுக்கு கொரோனாத் தொற்றைப் பரப்ப முயல்கின்றன,” என்று நாட்டின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா கமெனியும் தெரிவித்திருக்கிறார்.
மேற்கண்ட குற்றச்சாட்டுக்களை மீண்டும், மீண்டும் டுவீட்டிய ஈரானியத் தலைவர்களின் குறிப்பிட்ட டுவீட்டுகளை டுவிட்டர் தணிக்கை செய்து அகற்றிவிட்டது. தத்தம் தடுப்பு மருந்துகளைத் தயாரித்திருக்கும் ரஷ்யா, சீனா ஆகிய இரண்டு நாடுகளுமே ஈரானுடைய நட்பு நாடுகள். அத்துடன் ஈரானும் கடந்த மாதம் தனது சொந்தக் கண்டுபிடிப்பான கொவிட் 19 தடுப்பு மருந்தைத் தனது மக்களிடையே பரிசீலித்திருப்பதாக அறிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்