முதல் தடவையாக மக்கள் சூழலில் செய்யப்பட்ட கொரோனாத் தடுப்பு மருந்து பைசர் 95 % பாதுகாப்புத் தருவதாகக் குறிப்பிடுகிறது.

கொரோனாத் தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்வது என்பது எமது வாழ்க்கையை மீண்டும் 2020 க்கு முன்னரிருந்தது போல இப்போதைக்கு மாற்றிவிடப்போவதில்லை. ஆனால், தடுப்பு மருந்துகள் கொரோனாத் தொற்று ஏற்படாமல் ஒரு அளவு பாதுகாப்பையும், தொற்று ஏற்பட்டால் இறப்பில் அது முடியாமலிருக்க குறிப்பிட்ட அளவு பாதுகாப்பையும் தருகிறது என்பதே உண்மை. வெவ்வேறு தடுப்பு மருந்துகள் வெவ்வேறு அளவுக்குப் பாதுகாப்பைக் கொடுக்கின்றன. 

இதுவரை தடுப்பு மருந்துகள் எத்தனை விகிதப் பாதுகாப்பைக் கொடுக்கின்றன என்பது மருத்துவ பரீட்சைக்காகவே செய்யப்பட்டிருக்கிறது. முதல் தடவையாக ஒரு தடுப்பு மருந்து நிஜமான ஒரு சமூகச் சூழலில் எத்தனை பாதுகாப்பை நல்குகிறது என்பது இஸ்ராயேலில் தான் செய்யப்பட்டிருக்கிறது. ஆராய்வுக்கு உட்படுத்தப்பட்ட தடுப்பு மருந்து பைசர் – பயோன் டெக் நிறுவனத்தினுடையதாகும்.

பைசரின் தடுப்பூசிகள் இரண்டையும் போட்டுக்கொண்டவருக்கு அக்கிருமிகளிலிருந்து 95.3 % பாதுகாப்புக் கிடைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. போட்டுக்கொண்டபின்னரும் கொரோனாத் தொற்று ஏற்பட்டால் அதனால் இறப்பு ஏற்படாமலிருக்க 96.7 % பாதுகாப்பை இரண்டு தடுப்பூசிகள் கொடுக்கின்றன. 

தடுப்பூசிகளை வாங்குவதற்காக அதன் ஆராய்ச்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே ஒப்பந்தம் செய்துகொண்ட இஸ்ராயேல் 20 டிரம்பர் 2020 அன்று தனது நாட்டில் படுவேகமாகத் தடுப்பூசி கொடுப்பதை ஆரம்பித்தது. ஜனவரி 24 முதல் ஏப்ரல் 3 ம் திகதி வரை அந்த நாட்டி அம்மருந்தை போட்டுக்கொண்டவர்களிடையே மேற்கண்ட ஆராய்ச்சி நடாத்தப்பட்டது. 

இஸ்ராயேலில் தடுப்பூசிகள் போடுதலின் ஆரம்ப சமயத்தில் பொது முடக்கமும் அமுல் செய்யப்பட்டு மார்ச் 7 ம் திகதி வரை அமுலிலிருந்தது. தடுப்பூசிகள் போடப்பட ஆரம்பித்த சில வாரங்களிலேயே நாட்டின் கொரோனாத் தொற்றுக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைவதைக் காண முடிந்தது. ஆனால், முழு விளைவுகளுக்கும் தடுப்பூசிகள் இரண்டையுமே ஒருவர் போட்டுக்கொள்வது அவசியம் என்கிறது ஆராய்ச்சி.

ஒரு தடுப்பூசி பெற்றுக்கொண்டவர் ஏழு நாட்களின் பின்னர் 57.7 % கொரோனாக் கிருமிகளுக்கெதிரான பாதுகாப்பைப் பெறுகிறார். தொற்று ஏற்பட்டாலும் இறப்பு ஏற்படாதிருக்க 77 % பாதுகாப்பை அது கொடுக்கிறது. இஸ்ராயேலில் இரண்டு தடுப்பூசிகளுக்குமிடையே 21 நாட்கள் இடைவெளி விடப்படுகிறது.

ஒன்பது மில்லியன் மக்கள் தொகையுள்ள இஸ்ராயேலில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6.5 மில்லியன் பேராகும். அங்கே இதுவரை 5 மில்லியன் பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்கிறார்கள். 

2021 ஜனவரி 17 – 23 வரை இஸ்ராயேலில் இறப்பு மிக அதிகமாக இருந்தது. 414 பேர் அந்த நாட்களில் கொவிட் 19 ஆல் மரணமடைந்தார்கள். மே முதலாம் வாரத்தில் இறப்புக்கள் 9 பேர் மட்டுமே. ஜனவரி 10 – 16 ம் திகதி வரை தொற்றுக்களின் எண்ணிக்கை 60 370 ஆக இருந்தது. மே மாத முதல் வாரத்தில் அது 444 ஆகக் குறைந்திருக்கிறது. இதிலிருந்தும் தடுப்பு மருந்துகள் மிக வேகமாக சமூகத்தில் இறப்புக்களையும் தொற்றுக்களையும் குறைக்கின்றன என்பது தெரியவருகிறது. 

மருத்துவ விஞ்ஞான இதழான Lancet மேற்கண்ட ஆராய்ச்சியை இஸ்ராயேலின் மக்கள் ஆரோக்கிய அமைச்சுடன் இணைந்து நடத்தியது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *