ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் தனது அடையாளச் சின்னத்தை மாற்றியது!
தனது சரித்திரத்தில் ஐந்தாவது தடவையாக அமெரிக்காவின் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் ஒரு புதிய அடையாளச் சின்னத்தை அறிவித்திருக்கிறது. புதிய அடையாளம், புதிய நிறுவனம், எல்லோரையும் இணைத்தல் என்ற கோஷத்துடன் இந்தச் சின்னத்தை ஜனவரி 8 ம் திகதியன்று அமெரிக்காவில் பகிரங்கப்படுத்தி உலகளாவிய சந்தைப்படுத்தலை ஆரம்பித்திருக்கிறது ஜெனரல் மோட்டர்ஸ்.
வரவிருக்கும் வருடங்களில் பெரும் முதலீடுகளுடன் தனது பெரும்பாலான தயாரிப்புக்களைச் சுற்றுப்புற சூழலுக்கு ஒவ்வானவையாக்கும் தொழில்நுட்பத்தாலான வாகனங்களைத் தயாரிக்கவிருப்பதாக ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. இனிமேல் அவர்களுடைய பெரும்பாலான தயாரிப்புக்கள் மின்கல வாகனங்களாலான இயந்திரங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. 2025 அளவில் தமது நிறுவனம் மின்சக்தியால் இயங்கும் 30 வெவ்வேறு தனியார் வாகனங்களைச் சந்தைக்குக் கொண்டுவரும் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
“சரித்திரத்தில் அவ்வப்போது சில தருணங்களில் எல்லாம் மாறுவது முன்னரும் நடந்திருக்கிறது. புதிய தொழில்நுட்ப ஊடுருவல் புள்ளிகள் அவற்றை ஏற்படுத்துகின்றன. இது மின்சார வாகனங்களை பெருமளவில் ஏற்றுக்கொள்ளும் தருணம். முன்பைப் போலல்லாமல், அனைவரையும் இத்தொழில் நுட்பத்தில் இணைப்பதற்கான தீர்வுகள், திறன், அளவு ஆகியவை எங்களிடம் உள்ளது. எங்கள் நிறுவனத்தின் அடையாளமும், பிரச்சாரமும் இதைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்கிறார் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் சர்வதேச சந்தைப்படுத்தல் உயரதிபர் டெபொரா வாஹ்ல்.
சாள்ஸ் ஜெ. போமன்