பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதி மின்சாரம் இல்லாததால் இருட்டின் ஆட்சிக்குள் வந்தது.
09 தேதி சனியன்று மாலை பாகிஸ்தானின் பெரும்பகுதி மின்சாரம் இல்லாததால் இருளில் மூழ்கியது. கராச்சி, முல்தான், இஸ்லாமாபாத், லாகூர் ஆகிய முக்கிய நகரங்களும் நாட்டின் பல சிறு நகரங்களிலும் மின்சாரம் இல்லாமல் போனது.
ஞாயிறன்று முற்பகலில் ஆங்காங்கே மீண்டும் மின்சாரத் தொடர்புகள் கிடைத்தாலும் பிழையைத் திருத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் நடந்துகொண்டிருப்பதாகவும் நாடு முழுவதும் ஒவ்வொரு பகுதியாக மின்சாரத்தை மீண்டும் பெற்றுவிடும் என்றும் நாட்டின் மின்சக்தி அமைச்சர் ஒமார் அயூப் தெரிவித்திருக்கிறார்.
குத்து மின்சார நிலையத்தில் [Guddu power plant ஏற்பட்ட தவறொன்று தான் நாட்டின் பெரும்பான்மையான நகர்களில் மின்சாரம் இல்லாமல் போகக் காரணம் என்றும் அப்பிழை ஒரேயடியாக அந்த நிலையத்தின் மின்சாரச் செயற்பாட்டை இழக்கவைத்திருப்பதாகவும் அமைச்சர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். அதையடுத்து தர்பேலா மின்சார நிலையமும் செயற்பாட்டை இழந்ததாக அவர் குறிப்பிட்டார். அங்கே உடனடியாக அனுப்பப்பட்டிருக்கும் பொறியிலலாளர்கள் ஞாயிறு முற்பகல்வரை தொடர்ந்தும் எதனால் இந்த நிலைமை ஏற்படக் காரணம் என்று கண்டுபிடிக்க இயலவில்லையென்றும் அமைச்சர் விளக்கமளித்திருக்கிறார்.
மூன்றே வருடங்களில் பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் இரண்டாவது மின்சார இழப்பு இதுவாகும். 2018 இல் இதேபோன்ற ஒரு பிழையொன்று நாட்டின் பெரும்பகுதியை சுமார் ஒன்பது மணித்தியாலங்கள் இருட்டாக்கியது. அதற்கு முன்பு 2015 தீவிரவாதத் தாக்குதல் ஒன்றினால் பாகிஸ்தானின் 80 விகிதமான பகுதிகள் மின்சாரத்தை இழந்தன.
மின்சார இழப்பைப் பல பாகிஸ்தானியர்கள் தமது அரசாங்கத்தையும் பிரதமரையும் எள்ளி நகையாடுவதில் செலவிட்டனர். நீண்ட காலமாகவே வளர்ந்துவரும் நாட்டின் அடிப்படை மின்சாரத் தேவையை எதிர்கொள்வதற்கான அளவு மின்சாரத் தயாரிப்பை உண்டாக்குவதில் இம்ரான் அரசு கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனம் உண்டு. கொள்வனவாளர் தேவை 28,000 மெகாவட்ஸ் ஆக இருக்க தயாரிப்போ 22,000 மெகாவாட்ஸ் ஆக இருப்பதும் மின்சாரத் தேவை அதிகமாகி வரும் சமயத்தில் மின்சார நிலையங்கள் அதைக் கையாள இயலாமல் முழுவதுமாக செய்ற்பாட்டை நிறுத்திவிடுவதும் வழக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.
வளர்ந்துவரும் தேவையைப் பூர்த்திசெய்யப் புதிய மின்சார நிலையங்களும், விநியோக நிலையங்களும் அமைக்காதது மட்டுமன்றி ஏற்கனவே இருப்பவைகளையும் ஒழுங்காக அரசு பராமரிப்பதில்லையென்று விமர்சிக்கப்படுகிறது. ஒரு பகுதி நிர்வாகம், விநியோகத்தை அரசியல்வாதிகள் தனியாரிடம் கொடுத்துவிட்டதால் அவர்கள் வேண்டுமென்றே மின்சாரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலைகளை அதிகரிப்பதும் ஒரு காரணமென்று விமர்சிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்