வெளிநாட்டுப் பணக்காரர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை கொடுக்கும் திட்டத்தை பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது.

சரித்திரத்தில் முதல் தடவையாக பாகிஸ்தான் வெளிநாட்டவர்கள் தமது நாட்டின் நிலச் சொத்துகளை வாங்கி முதலீடுகள் செய்யும் திட்டமொன்றை அறிவித்திருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊட்டச்சத்துக் கொடுக்கப் பிரதமர் இம்ரான் கான் வெள்ளியன்று முன்வைத்திருக்கும் “தேசிய பாதுகாப்புத் திட்டத்தின்” கீழேயே வெளிநாட்டுச் செல்வந்தர்களைப் பாகிஸ்தானுக்குக் குடியுரிமை கொடுத்து வரவழைத்து முதலீடுகள் செய்யத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

கடந்த வருட இறுதியில் தலிபான்களின் கைகளில் ஆப்கானிஸ்தான் வீழ்ந்தபின் அங்கிருக்கும் செல்வந்தர்கள் தமது முதலீடுகளுடன் மலேசியா, துருக்கி போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வருகிறார்கள். தவிர அமெரிக்கா, கனடாவில் வாழும் சீக்கியர்கள், பாகிஸ்தானில் முதலீடு செய்ய விரும்பும் சீனர்களையும் குறிவைத்தே மேற்குறிப்பிட்ட “பாகிஸ்தானிய குடியுரிமைத் திட்டம்” கொண்டுவரப்படுவதாக செய்தித்துறை அமைச்சர் பவாத் சௌத்திரி தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ போமன்