பெர்லொஸ்கோனியின் அரசியல் சாதனைகளிலொன்றாக இத்தாலியின் ஜனாதிபதிப் பதவியும் எட்டுமா?

பெப்ரவரி 2022 இல் இத்தாலிய ஜனாதிபதி செர்ஜியோ மத்தரெல்லாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்ய இத்தாலியப் பாராளுமன்றம் கூடுவதற்கு இரண்டே வாரங்கள் இருக்கும் இந்த நிலைமையிலும் அப்பதவிக்கு வரப்போகிறவர் யாரென்பது எவருக்கும் தெரியவில்லை. மத்தரெல்லாவே மீண்டும் ஜனாதிபதியாகத் தடை ஏதுமில்லையென்றாலும் அவர் அப்பதவியில் தொடர விரும்புகிறாரா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இத்தாலியின் மாகாண, தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 1007 ஆகும். ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடுபவர் அவர்களில் மூன்றில் இரண்டு, அதாவது, 672 வாக்குகளைப் பெறவேண்டும். மூன்று தடவைகள் வாக்கெடுப்பு நடைபெற்றபின் அடுத்த தடவை வெல்பவர் பெரும்பான்மை வாக்குகளான 504 ஐப் பெறவேண்டும். வழக்கத்துக்கு மாறாக அரசியல் மைதானத்தில் இரகசியமே நிலவுகிறது. யார் யார், ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள் என்பது பொதுமக்களுக்குப் புரியாத புதிராக இருந்து வருகிறது.

தான் போட்டியிடுவதாகப் பகிரங்கமாக அறிவித்திருப்பவர் 85 வயதான முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லொஸ்கோனி ஆகும். 1994 – 1995, 2001 – 2006, 2008 – 2011 ஆகிய அரசாங்கங்களில் பிரதமராக 9 வருடம் இருந்தவர் பெர்லொஸ்கோனி. தனது பதவிக்காலத்தில் பல ஊழல்கள், பெண்கள் விவகாரங்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்ட தனவந்தர் பெர்லொஸ்கோனியை இத்தாலியில் பலர் ஒரு அரசியல் கோமாளியாகவே காண்கிறார்கள். தனது ஊழல்களுக்காக நீதிமன்றத்தில் அவர் தண்டிக்கப்பட்டும் இருக்கிறார்.

ஒரு கௌரவப் பதவியாக இருப்பினும் ஜனாதிபதிப் பதவிக்கு பெர்லொஸ்கோனி வருவதைப் பெரும்பாலான இத்தாலியர்கள் விரும்பவில்லை. ஆனால், சமீப காலத்தில் பல தடவைகள் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் பெர்லொஸ்கோனியை ஆதரிக்கப் பாராளுமன்றத்தின் இரண்டு வலதுசாரி, நிற்வாதக் கட்சிகள் தயாராக இருக்கின்றன.

ஜனாதிபதியாக இருக்கும் மத்தரெல்லா மக்களிடையே பிரபலமானவர். இத்தாலியப் பாராளுமன்றத்தில் சில வருடங்களாகவே நிலவிவரும் இழுபறிக்கிடையே நாட்டை ஆளப் பிரதமராக எவரையும் தெரிவுசெய்யக் கட்சிகள் மோதிக்கொண்டிருந்த சமயத்தில் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவராக இருந்த மாரியோ டிராகியைப் பிரதமராக்கினார். பல தடவைகளிலும் இத்தாலியச் சிறுபான்மைக் கூட்டரசு கவிழாமல் இருக்காமல் ஒட்டுப் போட்டு வருபவரும் அவரே.

பிரதமர் மாரியோ டிராகி கூட ஒரு ஜனாதிபதி வேட்பாளர் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஒருவேளை அவர் அதற்குத் தயாராக இருப்பினும் அரசியல் கட்சிகள் நாட்டின் பிரதமரை இழக்கத் தயாராக இல்லை. அப்பதவியிலிருந்து அவர் விலகினால் மீண்டும் கூட்டரசு யாரைப் பிரதமராக்குவது என்று தமக்குள் அடிபடும் நிலைமை வரும்.

இத்தாலி ஒரு குடியரசாகி 75 வருடங்களாகியும் நாட்டில் பெண் ஒருவர் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ தெரிவுசெய்யப்பட்டதில்லை. அந்த நிலைமையைச் சுட்டிக்காட்டி நாட்டின் ஜனாதிபதியாக ஒரு பெண்ணைத் தெரிந்தெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை நாட்டின் ஜனநாயக, சமூக அமைப்புக்களால் கோரப்படுகிறது. அப்படியான எண்ணங்கள் அரசியல் வட்டாரத்தில் இருப்பினும், யாரந்தப் பெண் வேட்பாளர் என்பது பற்றிய விபரங்களும் இல்லை.

சாள்ஸ் ஜெ. போமன்