காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலொன்றை மரணங்களாக எதிர்கொண்டது இத்தாலி.

நாடு தழுவிய வரட்சியை எதிர்கொண்டிருக்கும் இத்தாலியில் ஞாயிறன்று காலநிலை மாற்றத்தில் இன்னொரு விளைவாக பனிமலைப் பகுதியொன்று உடைவதையும் கண்டது. மார்மொலாடா என்ற பனிமலையிலிருந்து உடைந்த பாளமொன்றால் ஏழு பேர் இறந்தனர். மேலும் எட்டுப் பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 15 பேரை இன்னும் காணவில்லை என்று மீட்புப்படையினர் தெரிவிக்கின்றனர்.

இத்தாலியின் வடக்கிலிருக்கும் அல்ப்ஸ் மலைத்தொடரின் பகுதியான டொலமித்தர் பிராந்தியத்தில் பனிப்பாளம் உடைந்து பலர் இறந்த விபத்து ஞாயிறன்று ஏற்பட்டது. பல நாட்களாக அந்தப் பனிமலை உச்சியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வந்து அன்றைய தினத்தில் அது என்றும் காணாத 10° செல்சியஸை எட்டியிருந்தது. 

“காலநிலை மாற்றமானது அந்தப் பனிமலையின் உச்சியின் சமநிலையைத் தளம்பவைத்துவிட்டது. அதனால் அந்தப் பனிப்பாறைகளின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு பாரமாக இருக்கின்றன,” என்று ஏற்பட்ட விபத்தின் காரணத்தை விளக்குகிறார் பனிமலைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் மெஸ்ஸிமோ பிரெசெட்டி.

அங்கே தொடர்ந்து சில நாட்களாகப் பெய்துவரும் மழையால் காணாமல் போனவர்களைத் தேடுதலையும் தொடர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பனிப்பாறைகள் தொடர்ந்தும் உடைந்து விழலாம் என்ற நிலையில் மீட்புப் படைகள் தமது முயற்சியை மேற்கொள்ள முடியவில்லை. 

பனிப்பாறைகள் இயற்கையாகவும் உடைகின்றன. ஆனால்,காலநிலை மாற்றங்களினால் ஏற்பட்டு வரும் அதிக வெப்பநிலையால் அதிகளவு பனிப்பாறைகள் உடைந்து வருகின்றன. இத்தாலியெங்கும் கோடை வேகமாக ஆரம்பித்ததுடன் அதன் வெம்மையும் என்றுமில்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. கடந்த வார இறுதியில் 22 நகரங்களில் வெப்பமானி 40° செச்சியஸைத் தாண்டியிருந்தது. அல்ப்ஸ் பிராந்தியமெங்கும் அதிக வெப்பநிலை நிலவிவருகிறது.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் கணிப்புகளின்படி வட இத்தாலியில் தானிய விளைச்சல் பாதியாகக் குறையும் என்று குறிப்பிடப்படுகிறது. நாட்டின் நீர்வசதி வழங்கும் அதிகாரம் மக்கள் தமது தினசரித் தேவைக்கும் அளவுக்கதிகமான நீரைப் பாவிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஏற்பட்டிருக்கும் வரட்சியை எதிர்கொள்ள நீர்ப்பாவனை குறைக்கப்படவேண்டும் என்று குறிப்பிடுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *