செனகல் நாட்டின் சிறந்த மாணவி பாரிஸில் காணாமற்போனார்!

பாரிஸில் கல்வி பயின்றுவரும் செனகல் நாட்டைச் சேர்ந்த 20 வயதுடைய மாணவி காணாமற் போயுள்ளார். நகரின் 13 ஆம் வட்டாரத்தில் மாணவர் விடுதியில் வசித்துவந்த அந்த மாணவி பற்றி கடந்த 4ஆம் திகதிக்குப் பின்னர் தகவல் எதுவும் இல்லை என்று நண்பர்களும் செனகலில் வசிக்கும் குடும்பத்தினரும் தெரிவித்துள் ளனர்.

செனகல் நாட்டில் இரண்டு தடவைகள் நாட்டின் மிகச் சிறந்த மாணவி (“best student of Senegal”) என்ற விருதை வென்றவரான டையாறி சோ (Diary Sow) என்ற யுவதியே நத்தார் விடுமுறைக்குப் பின்னர் காணாமற்போயுள்ளார்.தனது அசாதாரண கல்வித் திறமையினால் புலமைப்பரிசில் பெற்று பாரிஸின் பிரபல lycée Louis-Le-Grand உயர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்று வந்த டையாறி சோ மர்மமான முறையில் காணாமற் போயிருப்பது புலம் பெயர் செனகல் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாரிஸில் உள்ள செனகல் நாட்டின் தூதரகம் மாணவியின் அங்க அடையாள விவரங்களை வெளியிட்டு அவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அறியத்தருமாறு கேட்டிருக்கிறது.

செனகல் மாணவர் அமைப்பினர் சமூக வலைத்தளங்களில் மாணவி குறித்த தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். 2019 இல் விசேட புலமைப்பரிசில் பெற்று பாரிஸில் கல்வியை ஆரம்பித்த அவர் “The face of an angel” என்ற நூலை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார்.பாரிஸ் பொலீஸார் விசாரணைகளைத் தொடக்கி உள்ளனர்.

(படம் :Consulat Sénégal Twitter screen shot)

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *