உகண்டாவின் சர்வாதிகாரியை இசைக்கலைஞரால் வெற்றிகொள்ள முடியுமா?
உகண்டாவின் சர்வாதிகாரி யொவேரி முஸெவெனி கடந்த 35 வருடங்களாகப் பதவியிலிருந்தாலும் மீண்டும் தானே நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றவேண்டுமென்று விரும்புகிறார். ஜனவரி 14 ம் திகதி நடந்த தேர்தலில் அவருக்கு எதிராகப் போட்டியிட்டவர் பொபி வைன் என்ற இசைக்கலைஞர்.
38 வயதான ரொபேர்ட் கியாகுயான்யி தனது கலைத்தொழிலுக்காக வைத்துக்கொண்ட பெயர் பொபி வைன். பதவியைத் தன்னிடமே தக்கவைத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்பும் முசெவெனியின் வயது 77 ஆகும். உகண்டாவின் 78 விகிதமான குடிமக்கள் 15 – 30 வயதுக்குட்பட்டவர்களாகும். அதாவது தமது வாழ்நாளில் வேறொரு ஜனாதிபதியின் கீழும் அவர்கள் வாழ்ந்ததில்லை.
பல ஆபிரிக்கத் தலைவர்களைப் போலவே பதவிக்கு வந்த ஆரம்ப காலத்தில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற முசவேனி காலப்போக்கில் ஒரு கடும் சர்வாதியாகினார். எதிர்க்கட்சிகளையும், தனது தலைமைக்குச் சவாலாக வருகிறவர்களையும் இரும்புக் கைகொண்டு அடக்கி ஒதுக்கினார். 2005 இல் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மாற்றம் ஏற்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்கால எல்லையை அகற்றினார். 2016 இல் தேர்தல் நடந்தபோது எதிர்ப் போட்டியாளரையும் அவரது கட்சியின் முக்கிய ஆறு தலைவர்களையும் வீட்டுப் பாதுகாவலில் வைத்துவிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் பொபி வைன் தான் முசவேனிக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதை அறிவித்தவுடனேயே அவரைக் கைதுசெய்தார் முசவேனி. தேர்தல் பிரச்சாரங்கள் நடக்கும் காலகட்டமெல்லாம் பொபி வைன் அரசின் கைக்கூலிகளால் தாக்கப்பட்டு வருகிறார். தேர்தல் தினத்தன்று சர்வதேசப் பத்திரிகையாளர்களுடனான பகிரங்கச் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோதே அவரைக் காவலர்கள் அவரது வாகனத்திலிருந்து இழுத்துச் சென்றதை உலகம் காண நேர்ந்தது.
நாடெங்கும் கொரோனாப் பரவல் இருப்பதால் பொபி வைன் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாதென்று அவரை வேட்டையாடியது உகண்டாவின் அரசாங்கம். அதே நேரம் ஜனாதிபதியோ சாதாரணமாகத் தேர்தல் கூட்டங்கள் நடத்தினார். எதிர்க்கட்சியின் பிரதான தொடர்புகள் சமூகவலைத் தளங்களின் மூலமாகவே நடத்தப்பட்டன. எனவே அவ்வப்போது உகண்டாவின் இணையத் தொடர்புகளை அரசாங்கம் முழுசாக மூடிவிட்டது. தேர்தலுக்கு முன்னைய நாட்களும் கூட இணையத் தளத் தொடர்புகள் அணைக்கப்பட்டிருந்தன.
வியாழனன்று நடந்த தேர்தலுக்குப் பின்னர் வாக்குகளை எண்ணுதல் ஆரம்பமாகியிருக்கிறது. இணையத் தொடர்புகள் மீண்டும் அணைக்கப்பட்டுவிட்டன. முசவேனியே தேர்தல் சாவடிகளில் ஆரம்பதருண வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதாகச் சில பத்திரிகைகள் எழுதி வருகின்றன. மொத்த விபரங்களும் வெளியாக மேலும் ஓரிரு நாட்களாகலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்