காஸ்ரோ என்ற குடும்பப்பெயரில்லாமல் கியூபாவில் ஜனாதிபதியாகும் மிகுவேல் கனேல்-டயஸ்.

பொதுவாக கியூபா என்ற சொல்லுடன் காஸ்ரோ என்ற பெயரே மனதுக்குள் தோன்றுவதால் நாட்டின் தலைவர்களெல்லோருமே காஸ்ரோ குடும்பத்தினர்தான் என்ற எண்ணமும் வருகிறது.  பிடல் காஸ்ரோ 1976 இல் நாட்டின் ஜனாதிபதியாகினார். அதையடுத்து 2006 இல் சகோதரர் ராவுல் காஸ்ரோ ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு தவணைகள் ஜனாதிபதியாக இருந்தார். அவரது பதவிக்காலம் 16.04 வெள்ளியன்று பூர்த்தியாகிறது. 

மானுவல் உருதியா என்பவர் தான் கியூபாவின் புரட்சி 1959 இல் நடந்தபின் முதலாவது ஜனாதிபதியாகப் பதவியேற்றவர். ஆனால் உருதியா நாட்டின் முன்னாள் தலைவர் பத்திஸ்தாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் சில மாதங்களே அவரால் பதவியிலிருக்க முடிந்தது. அவரையடுத்து 1959 இல் பதவியேற்ற ஒஸ்வால்டோ டொர்திகோஸ் 1976 ம் ஆண்டுவரை நாட்டின் தலைவராக இருந்தார். இவர்களின் பின்னால் பலமான பதவியான பிரதமராகவும், கம்யூனிஸ்ட் கட்சியும் பிரதம காரியதரிசியாகவும் இருந்த பிடல் காஸ்ரோ புரட்சி இராணுவத்தையும் தன்  பிடியில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 60 வருடங்களாக ராவுல் சகோதரர்களே நாட்டின் தலைமையைத் தமது பிடியில் வைத்திருந்தார்கள். 

உண்மையில் நாட்டின் ஜனாதிபதியாக 2018 லேயே மிகுவேல் கனேல்-டயஸ்  தெரிவுசெய்யப்பட்டு விட்டாலும் ஏப்ரல் 16 ம் திகதி ஆரம்பிக்கும் நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் சம்பிரதாயபூர்வமாகப் பங்குபற்றும் ராவுல் காஸ்ரோ தன்னிடமிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதமர் காரியதரிசி என்ற பதவியை விட்டு விலகும்போதுதான் நிஜத்தில் மிகுவேல் கனேல்-டயஸ் பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராவுல் காஸ்ரோ கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் காரியதரிசி பதவியிலிருந்து விலகும் அதே சமயம் உப காரியதரிசியான 90 வயது ஹோசே ரமோன் மச்சாடோவும் விலகுவார். அதன் மூலம் முதல் தடவையாக கியூபாவின் உயர் அதிகார மையம் காஸ்ரோ தலைமுறையினரிடமிருந்து இன்னொரு தலைமுறைக்குக் கையளிக்கப்படுகிறது. 

கியூபாவின் தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் அடித்தட்டிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டு வருபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அறுபது வயதான மிகுவேல் கனேல்-டயஸ் கூட அதேபோலக் கட்சியின் பல பதவிகளிலிருந்து மெதுவாகக் கம்யூனிசப் படியேறிவந்தவரே. 

இவர் ஒரு எலக்ரோனிக் பொறியியலாளராகும். அதன் பின்னர் இராணுவத்தில் பயிற்சிபெற்று ஆசிரியரானார். 1994 இல் முதல் முதலாக ஒரு பிராந்தியக் கம்யூனிஸ்ட் தலைமைப் பதவியைப் பெற்றார். 2003 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார மையத்தின் குழுவில் இடம்பெற்ற இவர் 2009 இல் நாட்டின் உயர்கல்விக்கான அமைச்சரானார். 

காஸ்ரோ சகோதரர்களால் அவர்களுடைய கோட்பாடுகளில் செதுக்கியெடுக்கப்பட்ட இவர் நவீன தொலைத்தொடர்பு வழிகள், தொழில் நுட்பம் போன்றவற்றில் மிகவும் ஆர்வமுடையவர் என்று குறிப்பிடப்படுகிறது. நாட்டின் அரசியல் கோட்பாட்டில் அதிக மாற்றங்களை உடனடியாக எதிர்பார்க்க முடியாவிட்டாலும் கியூபாவின் சமூகம் சமீப வருடங்களில் தொலைத்தொடர்புகளாலும், நவீன தொழில்நுட்பங்களாலும் இணைக்கப்ப்ட்டு வருவதற்கு மிகுவேல் கனேல்-டயஸ் ஒரு முக்கிய காரணகர்த்தா என்று கருதுகிறார்கள். 

மிகுவேல் கனேல்-டயஸ் நாட்டின் தலைவராகும்போது முதல் முதலாக ஒரு கியூபாவின் தலைவர் இராணுவ உடையின்றிக் காட்சியளிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *