சமூகவிலகலைக் கடைப்பிடிப்பதற்காக தான் பறந்த விமானத்தில் எல்லாப் பயணச்சீட்டுக்களையும் வாங்கியவர்.
32 வயதான ரிச்சார்ட் முல்யாடி இந்தோனேசியாவின் மிகப்பெரும் பணக்காரியான கர்ட்டீனி முல்யாடியின் பேரன், தனது உல்லாச வாழ்க்கைக்குப் பெயர்பெற்றவர். சுமார் 750 மில்லியன் டொலர்கள் சொத்துக்களைக் கொண்ட ரிச்சார்ட் தனக்குக் கொரோனாத் தொற்று ஏற்படக்கூடாதென்ற பயத்தில் மனைவியுடன் பயணித்த விமானத்தில் சகல பயணச்சீட்டுக்களையும் வாங்கினார்.
பட்டிக் ஏர் நிறுவனத்தின் விமானத்தில் ஜாகர்த்தாவிலிருந்து பாலிக்குப் பயணமான ரிச்சார்ட் தம்பதிகள் தனியாக அவ்விமானத்தில் பறந்ததாக ரிச்சார்ட் தனது இன்ஸ்டகிராம் படங்களில் குறிப்பிட்டிருக்கிறார். “நானும் என் மனைவியும் கொரோனாத் தொற்றுக்கு மிகவும் பயப்படுகிறோம். விமானத்தில் வேறெவருமில்லை என்று நிச்சயப்படுத்திக்கொண்டபின்னரே அதில் பயணித்தோம்,” என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
தனது உல்லாசமான வாழ்க்கை முறைகளைப் பற்றித் தம்பட்டம் அடிப்பதில் சளைக்காத ரிச்சார்ட் கொகெய்ன் பாவிக்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டு ஒன்றரை வருடம் சிறையிலிருந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் தனது ஆசைக்குரிய வளர்ப்பு நாய்க்கு ஒரு உல்லாசக் காரைப் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்துப் பரபரப்பு ஏற்படுத்தியவர்.
பேத்தி கர்ட்டீனி முல்யாடி இந்தோனேசியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனத்தின் உரிமையாளராகும். ரிச்சர்ட் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் உரிமையாளர். இவர்களுடைய குடும்பத்தினர் சுரங்கம், எரிநெய் நிறுவனங்களுக்கும் சொந்தக்காரர்கள் எனப்து குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்