கொவிட் 19 நோயாளி நிலைமை மோசமாகுமா என்பதை அனுமானிக்கக்கூடிய செயற்கையறிவை உண்டாக்கியதாகச் சொல்லும் பேஸ்புக்.
கொரோனாத் தொற்றுக்குள்ளான ஒருவரின் மார்பினுள் கதிர்வீச்சால் எடுத்த படங்களை வைத்து அந்த நபரின் தொடர்ந்த சுகவீனம் எப்படியாகும், பிராணவாயு கொடுக்கவேண்டிய அவசியம் உண்டாகுமா போன்றவற்றை முன்கூட்டியே சொல்லக்கூடிய மென்பொருளை உண்டாக்கியிருப்பதாக பேஸ்புக் தெரிவிக்கிறது.
பேஸ்புக் நிறுவனம், நியூ யோர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினருடன் இணைந்து அந்த மென்பொருளைக் கண்டுபிடித்திருப்பதாக இரண்டு பகுதியினரும் சேர்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ஐந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொவிட் 19 பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் இயந்திரங்களால் எடுக்கப்பட்ட படங்களை வைத்து செயற்கையறிவால் தரப்ப்படும் அந்த மென்பொருட்களின் மறுமொழிகள் மருத்துவர்கள் தமது நோயாளிகளுக்கு மேம்பட்ட முறையில் உதவுவதற்காகப் பயன்படும் என்கிறார்கள்.
நோயாளியின் மார்ப்புக்குள் எடுக்கப்பட ஒரேயொரு கதிர்வீச்சுப் படத்தை வைத்து அந்த நோயாளி அடுத்து வரும் நாட்களில் எந்த நிலைக்குப் போகிறார் என்பதை ஒரு மென்பொருள் கணித்துவிடும். இன்னுமொரு மென்பொருள் குறிப்பிட்ட நோயாளியில் தொடர்ந்து எடுக்கப்பட்ட கதிர்வீச்சுப் படங்களைக் கணித்து அந்த நபருடைய நிலை மோசமாகுமா, பிராணவாயு உதவிகள் எவ்வளவு தேவையாக இருக்கும் போன்றவற்றைச் சொல்லும் என்கின்றன அந்த நிறுவனங்கள்.
நியூ யோர்க் பல்கலைக்கழகத்தில் 4,914 நோயாளிகளின் 26,383 கதிர்வீச்சுப் படங்களை உபயோகித்து இந்த மென்பொருட்கள் குறிப்பிட்ட மென்பொருட்களை உண்டாக்குவதற்காக உபயோகப்பட்டன. அவைகள் நோயாளிகளின் 24, 48, 72, 96 மணிநேர மாற்றங்களைக் கவனித்துப் பதிந்துகொள்வதில் உருவாக்கப்பட்டன.
உலகில் தற்போது ஆகக்குறைந்தது 96 மில்லியன் பேர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2 மில்லியன் பேர் இறந்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்