பாரிஸ் கழிவு நீரில் வைரஸ் செறிவு 50 வீதமாக அதிகரிப்பு! மேயர் கவலை

பாரிஸ் பிராந்தியத்தில் மக்கள் நாளாந்தம் பயன்படுத்தி வெளியேறும் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கிருமியின் செறிவு மூன்று வாரங்களில் 50 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதன் அறிகுறி அது என்று அஞ்சப்படுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடி ஆரம்பித்தது முதல் பாரிஸ் பிராந்தியத்தின் கழிவு நீர் மாதிரிகள் தினமும் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன. நாட்டில் உள்ள 150 கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களிலும் வாராந்தம் இதுபோன்ற சோதனைகள் இடம்பெறுகின்றன.

தொற்றுகள் அதிகரித்து பெரும் எண்ணிக்கையில் நோயாளர்கள் பெருகுவதற்கு முன்பாக அத்தகைய நிலைவரம் ஏற்படப் போவதை முன்கூட்டியே கணிப்பதற்கு கழிவு நீர் சோதனைகளும் உதவுகின்றன.பாரிஸ் பிராந்தியத்தில் கடந்த மூன்று வாரகாலத்தில் கழிவு நீரில் வைரஸ் செறிவு பெரும் அதிகரிப்பைக் காட்டி இருப்பது தொற்றுக்கள் பெருகுவதன் அறிகுறியே என்று எச்சரிக்கப்படுகிறது.

இது குறித்து கவலை வெளியிட்டிருக் கின்ற பாரிஸ் நகரத்தின் முதல்வர் ஆன் கிடல்கோ, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு வேகமாக நகர வாசிகளுக்குத் தடுப்பூசி ஏற்றும் பணி தொடக்கப்படவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

குமாரதாஸன். பாரிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *