ஹொண்டுராஸிலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் குவாத்தமாலாவில் தடுக்கப்பட்டனர்.
லத்தின் அமெரிக்காவின் மிகவும் வறுமையான நாடுகளிலொன்றான ஹொண்டுராஸ் அரசியல் குழப்பங்கள், இயற்கை நாசங்கள், திட்டமிட்டு நடாத்தப்படும் கொலை, கொள்ளை, வன்முறை போன்ற குற்றங்களாலும் தினசரி பாதிக்கப்படுகிறது. எனவே, அங்குள்ளவர்கள் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்வதற்குக் கனவு காண்பது வழமை.
நடையிலேயே பல்லாயிரக்கணக்கானோர் தமது குழந்தை குட்டிகளுடன் தமது வடக்கு எல்லையிலிருக்கும் குவாத்தமாலாவுக்குள் புகுந்து அங்கிருந்து மெக்ஸிகோவையும் கடந்து அமெரிக்க எல்லையில் அரசியல் தஞ்சம், குடிபுகும் உரிமை கேட்பது அடிக்கடி நடக்கும் விடயமே. அமெரிக்காவின் ஆட்சி மாற்றம் எதிர்ப்பார்ப்புக்களைத் தூண்டியிருப்பதால் பல்லாயிரக்கணக்கான ஹொண்டுரஸார் அமெரிக்காவி நோக்கிப் புறப்பட்டிருப்பதாகவும் அவர்களில் சுமார் 9,000 பேர் ஏற்கனவே குவாத்தமாலாவுக்குள் நுழைந்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
டிரம்ப்பின் ஆட்சிக்காலத்திலும் இதேபோன்று பல தடவைகள் பல்லாயிரக்கணக்கானோர் ஹொண்டுராஸிலிருந்து நடந்து புறப்பட்டிருந்தனர். கடுமையான குடியேற்றச் சட்டங்களாலும், பக்கத்து நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டும் அவர்களை அமெரிக்க எல்லைக்குள் புகாமல் செய்துவந்தார் டிரம்ப்.
முதலாவது கூட்டம் குவாத்தமாலாவுக்குள் நுழைவது முடிந்தாலும் அவர்களை வழியில் தடுப்பதற்காக நாட்டின் இராணுவம் ஆங்காங்கே முட்டுக்கட்டைகளைப் போட்டிருக்கிறது. மெக்ஸிகோ தனது குவாத்தமாலா எல்லையிலும் இராணுவத்தைக் குவித்துத் தயாராக இருக்கிறது என்று அறிவிக்கப்படுகிறது.
முதலாவது கூட்டத்தின் பின்னால் தொடர்ந்த ஹொண்டுராஸார்களை குவாத்தமாலா எல்லையிலேயே தடை செய்து வருகிறது. தடியடிகள், கண்ணீர்ப் புகை, கேடயங்களுடன் அவர்களைப் பெருமளவில் தடுத்துவிட்டதாக குவாத்தமாலா அரசு தெரிவித்திருக்கிறது. அவர்களின் நடவடிக்கைகளை மெக்ஸிகோ அரசு பாராட்டியிருக்கிறது.
உள்ளே புகுந்த ஹொண்டுராஸார்களில் பெரும்பாலானோர் வழியில் மறிக்கப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பலருக்குக் கொரோனாத் தொற்று இருக்கலாமென்று சந்தேகப்படுவதாகக் குவாத்தமாலா குறிப்பிடுகிறது. சுமார் 20 பேர் தொற்றுக்களுடனிருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்