எதிர்க் கட்சிக்காரர்கள் 150 பேரை ஒரேயடியாக நீதிமன்றத்தில் விசாரிக்கும் கம்போடியா.

இன்று உலகின் நீண்டகாலம் ஆட்சியிலிருந்தவரும், ஆட்சிக்கு வந்தபோது உலகில் இளவயதுள்ள [32 வயது] தலைவராக இருந்தவருமான ஹுன் சென் ஆசியாவிலேயே கடுமையான சர்வாதிகாரியென்று மனித உரிமை அமைப்புக்கள் விமர்சிக்கின்றன. எதிர்க்கட்சிகள் எவரையுமே தலையெடுக்க விடாமல் 36 வருடங்களாக ஆட்சி செய்துவருகிறார் ஹுன் சென்.

தன்னை எதிர்ப்பவர்களைச் சிறைப்படுத்துதல், வீட்டுக் காவலில் வைத்தல், வெளிநாட்டிலிருந்து விமர்சித்துவிட்டு நாட்டுக்குத் திரும்ப எத்தனித்தால் நாட்டுக்குள்ளேயே நுழைய அனுமதிக்காமலிருத்தல் என்று இரும்புக்கைகளால் ஆட்சி நடத்திவருகிறார் ஹுன் சென். படு மோசமான அரசியல் கொலைகளை நடத்திய கமரூஜ் அமைப்பின் ஆட்சி வீழ்ந்தபின் வெளிவிவகார அமைச்சராக நுழைந்த ஹுன் சென் 1985 முதல் நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். இவரது ஆட்சியில் கம்போடியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு ஓரளவு மக்கள் சுபீட்சமடைந்திருப்பினும் மனித உரிமைகளை நசுக்கியே இவர் ஆட்சி செய்து வருவதாகப் பலரும் விமர்சிக்கின்றனர்.

கம்போடிய அரசுக்குத் துரோகம் செய்ததாகவும், அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு 150 எதிர்க்கட்சியினரைக் கூண்டிலேற்றியிருக்கிறார் ஹுன் சென். அவர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும், வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் அடங்குவர். அவர்களிலொருவரான மூ சொச்சுவா [Mu Sochua ]  என்ற அமெரிக்காவில் வாழும் எதிர்க்கட்சித் தலைவர் வழக்கை எதிர்நோக்குவதற்காக கம்போடியாவுக்குத் திரும்பினார். அவரை வழியில் சிங்கப்பூரில் வைத்து கம்போடிய விமானத்தில் ஏறத் தடுத்துவிட்டது கம்போடிய அரசு. 

“நான் எனது சொந்த நாட்டுக்குப் போய் என் மீது சாட்டப்பட்ட குற்றங்களை எதிர்கொள்ளப் போகிறேன், என்னை அனுமதிக்க மறுக்கிறார் ஹுன் சென். அவரது நடவடிக்கைகள் எங்கள் நாட்டு மக்களுக்கு மேலும் துன்பங்களைத் தருவதற்கு முதல் உலக நாடுகள் அவரைக் கட்டுப்படுத்தவேண்டும்,” என்று சிங்கப்பூர் விமான நிலையத்தில் கேட்டுக்கொண்டார் மூ சொச்சுவா. 

“ஹுன் சென் சர்வாதிகார நடத்தைகளில் மோசமாகிக்கொண்டிருக்கிறார். தனது எதிர்க்கட்சியினரைக் கூண்டோடு அழிப்பதில் அவர் ஈடுபட்டு வருகிறார்,” என்று குறிப்பிடுகிறார் கசித் பிரோம்யா , தாய்லாந்தின் முன்னால் வெளிவிவகார அமைச்சராக இருந்து தற்போது “மனித உரிமைக்காகக் குரல்கொடுக்கும் ஆசியப் பாராளுமன்ற உறுப்பினர்” அமைப்பின் பிரதிநிதி.

150 எதிர்க்கட்சிக்காரகள் மீதான வழக்கு நடந்து முடியச் சில மாதங்கள் ஆகுமென்று தெரிகிறது. வெளிநாட்டில் வாழ்பவர்களையும் அவர்கள் நேரிடையாகப் பங்குபற்றாமலே விசாரித்துத் தண்டனை வழங்கும் அதிகாரம் கம்போடிய அரசுக்கு உண்டு. சாட்டப்பட்டிருக்கும் குற்றங்களுக்காக 12 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம். கொரோனாக் கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி ஒரு சில வெளிநாட்டுப் பார்வையாளர்களையே கம்போடியா நீதிமன்ற விசாரணைகளைக் காண அனுமதித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *