கடந்த வருடம் டிரம்ப் உறுதிப்படுத்தியபடி சோமாலியாவிலிருந்து அமெரிக்க இராணுவம் வாபஸ் வாங்கப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப்பின் அரசியல் உறுதிமொழிகளிலொன்று வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களை அங்கிருந்து அகற்றுவது. அந்த வகையில் சோமாலியாவில் இருந்த கடைசி 700 அமெரிக்க இராணுவத்தினரும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.
சோமாலியாவில் பணியிலிருந்த அமெரிக்க இராணுவத்தின சோமாலியாவின் இராணுவம், அதிரடிப்படை ஆகியவற்றிற்குப் பயிற்சி கொடுப்பதுடன் தீவிரவாதிகளுக்கெதிரான முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் உதவிவந்தது.
அவர்களை ஆபிரிக்காவில் மிச்சமிருக்கும் அமெரிக்க நிரந்தர இராணுவத் தளங்களான கென்யா, ஜுபூத்தி ஆகிய இடங்களுக்கு முதல் கட்டமாக மாற்றுகிறது. வரவிருக்கும் ஜோ பைடனின் ஆட்சியில் மீண்டும் அவர்கள் சோமாலியாவுக்குத் திரும்புவார்களா என்பது பற்றி அமெரிக்க இராணுவத் தளபதிகள் பதிலெதுவும் சொல்லவில்லை.
சோமாலியாவில் தேர்தல் நடக்கவிருக்கும் ஒரு மாதத்துக்கு முதல் அமெரிக்கா தனது இராணுவத்தை அகற்றுவது பற்றி சோமாலிய அரசும் திருப்தியடையவில்லை. கடந்த வருடம் இவ்விடயம் அறிவிக்கப்பட்டிருந்தும் சோமாலியப் படைகள் தம்மால் தம் முன்னாலிருக்கும் நிலைமையை கையாளக்கூடிய அளவுக்குத் தயாராகவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
அதே சமயம் அல் கைதா தீவிரவாதிகளின் ஆபிரிக்கக் கிளை என்று சொல்லப்படக்கூடிய சோமாலியாவில் செயற்படும் அல் ஷபாப் குழுவினர் தமது தாக்குதல்களில் பலமாகி வருவதாகவும் சோமாலியா விசனமடைந்திருக்கிறது. அல் ஷபாப் குழுவினர் மொகடிஷுவிலும் சுற்றுப்புறங்களிலும் சாதாரணமான மக்களைத் தாக்கி வருகிறார்கள். அவர்களிடம் சுமார் 5,000 – 10,000 போராளிகள் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது.
அமெரிக்க இராணுவத்தினர் தவிர ஆபிரிக்க ஒன்றியத்தின் 19,000 பேர் கொண்ட வெவ்வேறு ஆபிரிக்க நாடுகளைக் கொண்ட இராணுவத்தினரும் சோமாலியாவின் அரசுக்கு உதவி வருகிறார்கள். இவ்வருடக் கடைசியில் அவர்களும் அங்கிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்