ஈரானுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுங்கள் என்று மத்திய கிழக்கு நாடுகளைக் கோருகிறது கத்தார்.
ஜனவரி முதல் வாரத்தில் சவூதி அரேபியாவில் நடந்த வளைகுடா நாடுகளின் மாநாட்டில் மீண்டும் கத்தாரைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டார்கள் சவூதி, எமிரேட்ஸ், பஹ்ரேன் ஆகிய நாடுகள். அந்த மூன்று நாடுகளும் மெதுவாக கத்தாருடன் தமது தொடர்புகளை மீள ஆரம்பித்துவரும் நேரத்தில் கத்தாரின் வெளிவிவகார அமைச்சர் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்படி கோருகிறார்.
எரிவாயுப் பிராந்தியத்தை ஈரானுடன் சேர்ந்து கொண்டிருக்கும் கத்தார் நீண்ட காலமாகவே சவூதி அரேபியா தன் பரம எதிரியாகக் கருதும் அந்த நாட்டுடன் இணக்கமான உறவைப் பேணி வருகிறது. வளைகுடா நாடுகளும் ஈரானுடன் உறவை ஸ்தாபித்துக்கொள்ளவே விருப்பம் தெரிவித்திருக்கின்றன என்கிறார் கத்தாரின் வெளிவிவகார அமைச்சர்.
“ஈரானுடன் நட்பை விரும்புகிறவர்களுக்காக நாம் மத்தியம் பேசத் தயாராக இருக்கிறோம்,” என்று குறிப்பிடும் கத்தார் டொனால்ட் டிரம்ப்புக்கு முன்னைய காலத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு உதவியிருந்தது. வரவிருக்கும் ஜோ பைடன் அரசு டிரம்ப் போல ஈரானை முற்றாக ஒடுக்கும் நோக்கத்திலிலில்லை என்பதை அறிந்துகொண்டே கத்தார் இந்தத் தூண்டிலைப் போட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
எப்படியாயினும் சமீபத்தில் கத்தாரைத் தம்முடன் மீண்டும் சேர்த்துக்கொண்ட வளை குடா நாடுகளின் மாநாட்டின் கடைசி அறிக்கையில் “மத்திய கிழக்கின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்க முயலும் ஈரானின் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்க்க நாம் கூட்டுறவுடன் செயல்படவேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டதுடன், ஈரானுடைய இன்னொரு முக்கிய எதிரியான இஸ்ராயேலுடன் அரபு நாடுகள் சமீபத்தில் நெருங்கி வருவதையும் குறிப்பிடவேண்டும்.
பரஸ்பர எதிரிகளாக இருக்கும் ஈரான் – இஸ்ராயேல், ஈரான் – சவூதி அரேபியா ஆகிய முட்டுக்கட்டைகளைத் தாண்டி மத்திய கிழக்கில் எல்லா நாடுகளும் கைகுலுக்குமா என்பது சந்தேகமே!
சாள்ஸ் ஜெ. போமன்