சாதாரண முகக்கவசம் போதாது FFP2 முகக்கவசங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும்! – பவரியா மாநிலம், ஜேர்மனி

உலகின் பல நாடுகளிலும் முழுவதுமாகவோ, பகுதி பகுதியாகவே முகக்கவசங்கள் அணிதல் என்பது கட்டாயம், அவசியம் என்ற நிலை உண்டாகிவிட்டது. கொரோனாப் பரவலைத் தடுப்பதில் முகக்கவசங்கள் தனியாக எந்த ஒரு முக்கிய பங்கையும் பெற்றிருக்கவில்லையென்று ஆராய்ச்சிகள் பல குறிப்பிட்டும் கூட முகக் கவசம் அணிதல் = கொரோனாக் கட்டுபாடுகளை அனுசரித்தல் என்ற அடையாளமாகிவிட்டது.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு உட்பட, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எல்லோருமே சமூக விலகல், துப்பரவு போன்றவைகளுடன் சேர்த்துத்தான் முகக்கவசமணிதல் ஓரளவு பிரயோசனமாக இருக்கும் என்கிறார்கள். சாதாரண முகக் கவசம் என்றால் அது ஒரு பட்டைத் துணியோ அல்லது ஒரு காகிதத்தால் ஆனதாகவோ இருக்கிறது. அதைத்தான் உலக நாடுகளில் பாவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

முதல் தடவையாக ஜேர்மனியில் பவரியா மாநிலம் சாதாரண முகக்கவசம் பாவிப்பது நோய்க்கட்டுப்பாட்டுக்குப் போதாது, பொது இடங்களில் FFP2 முகக்கவசங்களைப் பாவிப்பது கட்டாயம் என்ற கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. ஜனவரி 18 ம் திகதி திங்களன்று முதல் அமுல்படுத்தப்பட்டிருக்கும் இக்கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள் அடுத்த வாரம் முதல் தண்டம் செலுத்தவேண்டிவரும்.

இந்தக் கட்டுப்பாடு பல கோணங்களிலும் விமர்சனத்தை உண்டாக்கியிருக்கிறது. சாதாரணமான முகக்கவசங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடியவை, சில மீண்டும் மீண்டும் கழுவிப் பாவிக்கக்கூடியவை. FFP2 முகக்கவசங்கள் 7 – 8 எவ்ரோக்கள் விலையானவை. இணையத்தளங்களில் ஒருவேளை கொஞ்சம் மலிவாகலாம். ஆனால், மீளப் பாவிக்க முடியாதவை. 

விலை அதிகமான அந்த முகக்கவசங்கள் எட்டு மணி நேரமே பாவனைக்கு உகந்தவை. எனவே சாதாரண வருவானமுள்ள ஒருவருக்கு அல்லது வேலையற்று உதவிப்பணமாக மாதத்துக்கு 17.02 எவ்ரோக்கள் தனது ஆரோக்கியச் செலவுக்குப் பெறும் ஒருவருக்குக் கட்டுப்படியாகாத ஒன்று என்று சுட்டிக் காட்டப்படுகிறது. எனவே, அவற்றை, இலவசமாக அரசு கொடுக்கவேண்டுமென்று குறிப்பிடப்படுகிறது. 

அடுத்ததாக அந்த முகக்கவசங்களைச் சரியான முறையில் அணிந்த்கொள்ளாவிட்டால் அதனால் பிரயோசனமே இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்களெல்லோரும் அதை அணிந்துகொள்ளவேண்டுமென்பதே கட்டுப்பாடு. பெரும்பாலானவர்களுக்கு அவைகளைப் பாவிக்கவே தெரியாத நிலையில் அவைகளை அறிமுகப்படுத்துவதில் பிரயோசனமில்லை என்கிறார்கள் மருத்துவ விற்பன்னர்கள்.

பல கோணங்களிலிருந்தும் வந்திருக்கும் விமர்சனங்களுக்குப் பின்னர் பவரியா மாநில அரசு குறிப்பிட்ட அளவு FFP2 முகக்கவசங்களை இலவசமாக ஆங்காங்கே விநியோகிக்க எண்ணியிருக்கிறது. அதை விற்பவர்களோ பெரும்பலும் விலைகளை உயர்த்திவிட்டார்கள் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *