பேர்லின் 2016 நத்தார் படுகொலைகள் இடத்துக்கருகே மக்களிடையே புகுந்த வாகனம் ஒருவரைக் கொன்றது.

ஜேர்மனியின் பெர்லின் நகரின் பிரபல வியாபாரப் பகுதியில் மக்களிடையே கார் ஒன்று பாதசாரிகளிடையே நுழைந்து மோதியது. விற்பனைப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படும் சாளரமொன்றுக்குள் அது நுழைந்தது. ஒருவர் உயிரிழந்தார், ஐவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், முப்பது பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

புதனன்று காலை சுமார் 10.30 அளவில் சார்லொட்டன்பர்க் என்ற நகரப்பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சாரதி வேண்டுமென்றே இக்காரியத்தைச் செய்தாரா அல்லது அது ஒரு விபத்தா, சுகவீனமானவரா என்பது இன்னும் தெரியவில்லை. காரிலிருந்த சாரதியை அங்கே சுற்றியிருந்தவர்கள் வளைத்துப் பிடித்துப் நகர்காவலர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இதே பகுதியில் 2016 இல் நத்தார்ச் சந்தையொன்றினுள் ஒரு இஸ்லாமியத் தீவிரவாதி பாரவாகனத்துடன் வேண்டுமென்றே நுழைந்து பலரைக் கொன்றான். அச்சமயத்தில் 13 பேர் கொல்லப்பட்டு சுமார் 50 பேர் காயமடைந்தார்கள். இன்றைய சம்பவம் நத்தார்ச் சந்தைக் கொலைகள் நடந்த இடத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தூரத்திலேயே நடந்திருக்கிறது.

இன்றைய சம்பவத்தில் பங்குகொள்ளும் மீட்புப்படையினர் பலரும் அன்றைய தாக்குதலின் போது உதவுவதில் பங்குபற்றியிருந்தார்கள். அவர்களில் பலர் அன்றைய நிகழ்ச்சிகளால் மன உழற்சிக்கு உள்ளாகியதற்காகத் தொடர்ந்தும் மனோதத்துவ ஆலோசனைகள் பெற்று வருகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *