ரொனால்டில் ஆரம்பித்த பாரம்பரியம் டொனால்டில் முடிந்துவிடுமா?
1989 இல் தனது பதவிக்காலம் முடிந்து வெள்ளை மாளிகையின் அலுவலக அறையிலிருந்து அகலும்போது தனக்கு அடுத்து வரும் ஜனாதிபதிக்காக மேசையில் சில வரிகளை எழுவைத்துவிட்டுப் போனார் ரொனால்ட் ரீகன்.
தனக்குப் பிறகு வந்த ஜோர்ஜ் புஷ்ஷின் பதவிக்காலத்துக்கு வாழ்த்திவிட்டு “நாம் சேர்ந்து சாப்பிடும் வியாழக்கிழமை மதியச் சாப்பாட்டு நேரத்தை இனி இழந்துவிடுவேன்,” என்று அவர் குறிப்பு எழுதியிருந்தார்.
அதிலிருந்து ஆரம்பித்தது பதவி விலகும் அமெரிக்க ஜனாதிபதிகள் புதிதாக வருபவருக்குச் சுவாரஸ்யமாக எதையாவது எழுதிவிட்டுச் செல்லும் பாரம்பரியம். அந்த பதவியிலிருப்பவர்கள் நடத்தைகள் சரித்திரத்தில் முக்கியத்துவம் பெறுவது வழக்கம். ரீகனின் பின்னர் வந்த ஒவ்வொரு ஜனாதிபதிகளும் 32 வருடங்களாக அதைத் தொடர்ந்து வருகிறார்கள்.
அதிகாரத்தை இன்னொருவரிடம் ஒப்படைப்பது பெரும்பாலும் மகிழ்ச்சியான விடயமல்ல. ரீகன் பதவியை புஷ்ஷிடம் ஒப்படைத்தபோது மட்டுமே ஒரே கட்சியைச் சேர்ந்த ஒரு ஜனாதிபதி அதே கட்சி ஜனாதிபதியிடம் பதவியை ஒப்படைத்தார். மற்றைய சமயங்களில் ஜனாதிபதியொருவர் பதவி விலகி எதிர்க்கட்சி ஜனாதிபதியே பதவியேற்றார். அப்படியிருந்தாலும் அவர்கள் நட்புடன் இன்னொருவருக்கு வாழ்த்தி, அறிவுரைகளையும் எழுதியிருக்கிறார்கள்.
“இந்த அறைக்குள் நான் நான்கு வருடங்களுக்கு முன்னர் நுழைந்தபோது உண்டாகிய மதிப்பு, ஆச்சரியம் போன்ற உணர்வுகளையே நீங்களும் அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த அறையில் மகிழ்ச்சியை நீங்கள் அனுபவிக்க வாழ்த்துகிறேன். முன்னைய ஜனாதிபதிகள் சிலர் குறிப்பிட்ட தனிமையை நான் இந்த அறையில் உணரவில்லை,” என்று தனது இரண்டாவது பதவிக்காலத்தை வெல்லமுடியாமல் 1992 இல் பில் கிளிண்டனிடம் தோற்றுப்போன ஜோர்ஜ் புஷ் எழுதியிருந்தார்.
தொர்ந்து, “ஆலோசனை சொல்வதில் நான் கெட்டிக்காரனல்ல. ஆனாலும், உங்களுடைய விமர்சகர்கள் சொல்வதைக் கேட்டு நீங்கள் போட்டிருக்கும் குறியைத் தவறவிடலாகாது. இங்கே நீங்கள் வெற்றிபெறுவது எங்கள் நாடு பெறப்போகும் வெற்றி,” என்று குறிப்பிட்டிருந்தார்.
தனக்குக் குறிப்பெழுதி வாழ்த்தியவரின் மகனிடம் தனது இரண்டு பதவிக்காலங்களுக்குப் பின்னர் பதவியை விட்டுவிட்டுப் போகும்போது கிளிண்டன், “நீங்கள் சுமக்கப்போகும் பாரங்கள் பொதுவாகக் கடினம் என்று அனாவசியமாக விபரிக்கப்பட்டவை. நீங்கள் சரியென்று நம்புவதைச் சந்தோசத்துடன் நிறைவேற்றும் உணர்வு விபரிக்க முடியாதது,” என்று குறிப்பிட்டிருந்தார்.
எட்டு வருடங்களுக்குப் பின்னர் ஒபாமாவிடம் பதவியை ஒப்படைத்த மகன் ஜோர்ஜ் புஷ், “விமர்சகர்கள் கூச்சல் போடுவார்கள். உங்கள் நண்பர்கள் உங்களைக் காலை வாரிவிடுவார்கள். எது நடந்தாலும் உங்களைக் கவர்ந்தவர்கள் தங்கள் சுயத்தாலும் நடத்தையாலும் உங்களை வழிநடத்தியதுபோல நீங்களும் மற்றவர்களை வழிநடத்துங்கள்,” என்று எழுதியிருந்தார்.
புஷ்ஷின் இரட்டைப் பிள்ளைகளான அச்சமயம் 27 வயதான ஜென்னாவும், பார்பராவும் ஒபாமாவின் 10, 07 வயது மகள்களான மைலாவுக்கும், சாஷாவுக்கும் சுவாரஸ்யமான குறிப்புக்களை எழுதியிருந்தார்கள்.
“இது எந்த ஒரு தெளிவான வழிகாட்டல்களாலும் இயக்கமுடியாத ஒரு தனித்துவமான பதவி. எனவே, உங்களுக்கு உதவக்கூடிய எந்த அறிவுரையையும் சொல்ல முடியுமென்று நான் நம்பவில்லை,” என்று ஒபாமா தனது குறிப்புக்களில் டொனால்ட் டிரம்ப்புக்கு எழுதியிருந்தார்.
மேலும் ஆருடம் கூறுவதுபோல, “இங்கே நாம் தற்காலிகமாக வசிக்க வந்தவர்கள். அதனால் நாம் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் மரபுகளின் பாதுகாவலர்களாக ஆகுகிறோம். பொது உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல், எல்லோருக்கும் பாதுகாப்புக் கொடுத்தல் போன்றவைகளை எங்கள் முன்னோர்கள் போராடி, இரத்தம் கொட்டிச் சம்பாதித்த்துத் தந்திருக்கிறார்கள். எங்கள் ஜன நாயகத்தின் அந்தக் கருவிகளை அதேயளவு வலிவானதாக நாம் பேணவேண்டும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
எவரும் எதிர்பாராதவைகளைச் செய்து தனக்கென்று ஒரு பாணியுடன் நடந்துவந்த டிரம்ப் நடந்த தேர்தல் முடிவை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை, வரப்போகும் ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவிலும் கலந்துகொள்ளப்போவதில்லை. எனவே, குறிப்பு எழுதிவிட்டுப் போகும் வழக்கத்தையும் தொடருவாரா என்பது கேள்விக்குறியே.
சாள்ஸ் ஜெ. போமன்