டொனால்ட் டிரம்ப்பின் வருமானங்கள், வரிகள் பற்றிய விபரங்கள் வெளியாகின.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுமார் மூன்று வருடங்களாகத் தவிர்த்து வந்த விடயங்களிலொன்று தனது வருமானங்கள், கட்டிய வரி விபரங்களை வெளிப்படுத்த மறுத்ததாகும். பாராளுமன்ற முடிவு, பல நீதிமன்றங்களின் முடிவுகளை எதிர்த்து அவ்விபரங்களை வெளியிட அவர் மறுத்தார். இறுதியில் பாராளுமன்றக் குழுவொன்று சுமார் 6,000 பக்கங்களிலான அவ்விபரங்களை வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வருமானங்கள், கட்டிவரும் வரிகள் பற்றிய விபரங்களைப் பகிரங்கமாக வெளியிடுவது பாரம்பரியமாக இருந்தது. டொனால்ட் டிரம்ப் அதைச் செய்ய மறுத்த முதலாவது ஜனாதிபதியாகும். 2015 – 2020 வருடங்களுக்கான வருமானங்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டபோது அவர் 2020 இல் வரிகளெதுவும் கட்டவில்லை என்றும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 2016, 2017 ம் ஆண்டுகளில் 750 டொலர்களை மட்டுமே வரியாகக் கட்டியிருக்கிறார். 2018 இல் அவர் கட்டிய வரி சுமார் 1 மில்லியன் டொலர்களாகும்.

தன்னை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்வதற்காக ஆதரவு கோரும்போது அவர் முன்வைக்கும் அதிமுக்கிய வாதங்களிலொன்று தான் ஒரு வெற்றிகரமான வியாபாரி, நிறுவனர் என்பதாகும். அவரது வருமான விபரங்களிலிருந்து ஜனாதிபதியாக முன்னரும் பின்னரும் அவர் தனது நிறுவனங்கள் பெரும் இழப்புக்களை அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டு வரி கட்டாமலிருந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. அவ்விபரங்கள் அவர் வரி ஏய்ப்பு, கணக்குகளில் தில்லுமுல்லு, பொருளாதார மோசடிகள் செய்திருக்கிறார் என்று குறிப்பிட்டு அவர் மீது நடந்துவரும் வழக்குகளுக்கு மேலும் பலமூட்டும் என்றும், மேலும் புதிய வழக்குகளை அவருக்கு மீது வரவைக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

2020 இல் பொருளாதார இழப்புகள் பெருமளவில் உண்டாகியதாகக் குறிப்பிட்டிருக்கும் டிரம்ப் அவ்வருடத்தில் தனது ஜனாதிபதி வருவாயை நல்ல விடயங்களுக்காகத் தானம் செய்யவிருப்பதாக கொரோனாக்காலத்தில் உறுதியளித்திருந்தார். ஆனால், அவ்வருடம் அவர் எந்த நல்ல காரியத்துக்காகவும் நன்கொடை கொடுத்ததாக வரி விபரங்களில் இல்லை.

டொனால்ட் டிரம்ப்பின் வருமான விடயங்களை வெளிப்படுத்தியதைத் தவறான முன்மாதிரி என்று ரிபப்ளிகன் கட்சியினர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். 

இதன் மூலம் எதிர்காலத்தின் தனியார் அல்லது அரசியல்வாதிகளின் பொருளாதார விபரங்களை எதிர்காலத்தில் இதேபோன்று வெளியிடும் நிலைமையை ஆளும் அரசின் கட்சி செய்யலாம் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *