ரூஸ்வெல்ட்டின் பாதையில் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுடன் ஜோ பைடனின் நூறு நாட்கள்.

நாட்டின் முதலீட்டாளர்களால் சோசியலிசவாதி என்று நிந்திக்கப்பட்டு, கடைத்தர மக்களால் தனது சமூகச் சீர்திருத்தத் திட்டங்களுக்காகப் பாராட்டப்பட்டவர் அமெரிக்காவின் 32 வது ஜனாதிபதியாக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட். டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தின் பின்னர் பதவியேற்ற ஜோ பைடனின் முதல் நூறு நாட்களும் கூட அவர் பல சமூகச் சீர்திருந்தங்கள் பலவற்றுக்கு வித்திடுவதைக் காட்டுவதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். 

பல வழிகளிலும் மோசமான நிலைமையிலேயே தான் அமெரிக்காவின் ஆட்சியைப் பொறுப்பேற்கவேண்டியிருந்தது என்று குறிப்பிட்ட ஜோ பைடன் நாட்டின் வெற்றிகரமான தடுப்பூசித் திட்டத்தினால் மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை வெளிச்சம் உண்டாக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். நாட்டின் மீது ஏற்பட்ட மிகப்பெரும் தாக்குதல்களாக ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்றக் கட்டடத்தில் நடந்த டிரம்ப் ஆதரவாளர்கள் அத்துமீறல்களையும், கொரோனாத் தொற்றுக்களையும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு மாற்றி எமக்குச் சாதகமாக்கி அமெரிக்க சமூகத்தை மீண்டும் சுபீட்சமாக்குவோம் என்று குறிப்பிட்ட அவர் நாட்டின் 18 வயதுக்கு மேற்பட்டோர் எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள உரிமையுள்ளவர்கள் என்று குறிப்பிட்டார். அது சமூகத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர மிக அவசியமென்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

கொரோனாத் தொற்றுக்கள், நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்புக்கள் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை அவர் ஒன்றிணைத்துப் பேசினார். அதற்கான திட்டங்களுக்காகத் தான் முன்வைத்திருக்கும் 4,000 பில்லியன் டொலர்கள் பெறுமதியான திட்டங்கள் நாட்டுக்கும், சமூகத்துக்கும் ஊட்டச்சத்தாக அமையும் என்றார். 

அந்த முதலீடுகளுக்குத் தேவையான தொகை நாட்டின் பெரும் நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள் மீது போடப்படும் வரிகளால் அறவிடப்படும். வருடத்துக்கு 400,000 டொலர்களுக்கு அதிகமாகச் சம்பாதிப்பவர்கள் மீதே வரியுயர்த்தல்கள் அமுல்படுத்தப்படும். ஒருவர் ஆகக்கூடியது 39. 6% வரியையே செலுத்தவேண்டிவருமென்றும் அந்த விகிதம் தான் ஜோர்ஜ் புஷ் ஆட்சியிலிருந்தபோது அறவிடப்பட்ட வரியின் அளவே என்று அவர் ஒப்பிட்டார்.

வரிகளை உயர்த்துவது எதிர்க்கட்சியான ரிபப்ளிகன் கட்சியினருக்கு மட்டுமல்ல பொதுவாகவே அமெரிக்கர்களுக்கே பிடிக்காத விடயமாகும். ஜோ பைடனின் கட்சிக்குள்ளேயே வரியுயர்த்தலால் பல வாக்காளர்களை இழக்கலாம் என்று அதை எதிர்ப்பவர்கள் உண்டு. எனவே, “நான் பில்லியனர்களுக்கு எதிரியல்ல. அவர்களும், தமது பங்குக்குச் சமூகத்துக்கு உதவட்டும் என்பதே என் நிலைப்பாடு,” என்று விளக்க முற்பட்டார்.

பதவியேற்ற பின்னரும் அமெரிக்காவைத் தொடர்ந்தும் உலுக்கிவரும் “துப்பாக்கியேந்தியவர்களின் கூட்டுக் கொலைகள்” பற்றியும், கறுப்பினத்தவர்கள் மீது நடாத்தப்படும் அராஜகம் போன்றவற்றைக் குறிப்பிட்டார் ஜோ பைடன். நாட்டின் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரவும், சமூக ரீதியில் கறுப்பின மக்களுக்கான நீதி வழங்கப்பட வேண்டுமென்றும் தான் நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார். 

பெரும்பாலும் உள்நாட்டு அரசியல் பற்றியே தனது 100 வது நாள் பேச்சில் குறிப்பிட்ட ஜோ பைடன் வெளிநாட்டு அரசியல் பகுதியில் சீனாவுடனான கருத்து வேறுபாடுகள் பற்றியும் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திருப்பியெடுக்கப்படுவதைப் பற்றியும் குறிப்பிட்டார்.

ஜோ பைடனின் உரைக்குப் பதிலுரையளிக்க ரிபப்ளிகன் கட்சியினர் தமது ஒரேயொரு கறுப்பின செனட்டரான டொம் ஸ்கொட்டைத் தெரிந்தெடுத்திருந்தனர். அவர் பேசும்போது, “டொனல்ட் டிரம்ப்பின் முயற்சியால்தான் அமெரிக்காவில் கொரோனாத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்றும், தற்போதைய அரசு பதவியேற்றபோது கொவிட் 19 இன் பிடியிலிருந்து அமெரிக்கா விடுபட ஆரம்பித்து விட்டது,” என்றும் முன்னாள் ஜனாதிபதியைப் புகழ்ந்து பேசினார்.  

பைடனுடைய பாராளுமன்ற உரைக்குத் தனது ஊடகம் மூலம் பதிலடி கொடுத்த டொனால்ட் டிரம்ப் “நான் தான் கொவிட் 19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படக் காரணமாக இருந்தேன்,” என்று குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *