பிரான்ஸில் தடுப்பூசி ஏற்றிய பிறகு 5 மரணங்கள், 139 பக்க விளைவுகள்
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து நேற்றுவரை பக்க விளைவுகள் சம்பந்தமாக 139 அறிக்கை கள் பதிவாகி இருக்கின்றன. ஊசி ஏற்றிய பின்னர் நிகழ்ந்த ஐந்து உயிரிழப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் சுகாதார அமைச்சு இத்தகவல் களை வெளியிட்டிருக்கிறது.மூன்று உயிரிழப்புகள் நான்ஸியிலும் (Nancy) ரூர் (Tours) மற்றும் மொம்பெலியே (Montpellier) பகுதிகளில் தலா ஒவ்வொன்றுமாக ஐந்து மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இவை 75 வயதுக்கு மேற்பட்டவர்களுடைய இறப்புகள் ஆகும்.ஒவ்வாமை போன்ற எந்தவித பக்கவிளைவுகளையும் வெளிப்படுத்தாத இவர்களது மரணங்களுக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்பது பூர்வாங்கப் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மரணங்களை “தடுப்பூசியால் நிகழ்ந்த மரணங்கள் என்று கூறுவதை விட தடுப்பூசி ஏற்றிய காலப் பகுதியில் நிகழ்ந்த இறப்புகள்” என்று அழைப்பதே சரியானது ஆகும் என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் செய்தியாளர்களது கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார்.
வயோதிபத்தில் பல்வேறு நோய்களாலும் அவற்றுக்கான சிகிச்சைகளினாலும் நொந்து நெடிந்து மிகவும் பலவீனமான நிலையில் இருப்பவர்களது இறப்புகள் கொரோனா வைரஸ் சமயத்தில் மிகவும் இயல்பாக நிகழ்பவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.எதுவாயினும் ஐந்து இறப்புகள் குறித்தும் தடுப்பூசி தொடர்பிலும் முழு அளவில் விசாரணை நடத்தப்படும். வலுவான சந்தேகம் காணப்படும் இடத்து மேலதிக ஆய்வுகள் இடம்பெறும் எனவும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
பிரான்ஸில் நேற்றுவரை நாடெங்கும் 585,664 பேருக்குத் முதல் தடவைக்குரிய தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்ற ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கடுமையான, மற்றும் எதிர்பாராத பக்க விளைவுகள் தொடர்பாக 139 அறுக்கைகள் இதுவரை கிடைத்துள்ளன என்று உணவு, மருந்து பக்க விளைவுகளைக் கண்காணிக்கும் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் நிகழ்ந்த ஐந்து மரணங்களுடன் சேர்த்து ஜரோப்பாவில் இதுவரை தடுப்பூசியுடன் தொடர்புடைய 71 இறப்புக்கள் பதிவாகி உள்ளன. இங்கிலாந்து, ஜேர்மனி, நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகளில் நிகழ்ந்துள்ள அந்த உயிரிழப்புகள் அனைத்தும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுடயவை ஆகும்.
குமாரதாஸன். பாரிஸ்.