பச்சை வானில் கடத்தப்பட்டதாக பொய் கூறிய 17 வயது மாணவி! 200 பொலீஸார் 2 நாள்கள் தேடுதல்.

பிரான்ஸின் வடமேற்கே மயென்(Mayenne)என்ற நகரத்தைப் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய சம்பவம் இது. அங்கு வசிக்கின்ற 17 வயதான மாணவி ஒருத்தி கடந்த திங்களன்று மாலை நடைப்பயிற்சிக்குச் சென்ற சமயத்தில் காணாமற்போனார். நேரமாகியும் மகள் வீடு திரும்பாதது கண்டு மகளைத் தேடிச் சென்ற தந்தை, மகள் நடைப்பயிற்சிக்குச் செல்லும் காட்டு வழியில் மகளது கைத் தொலைபேசி மற்றும் கேட்கும் கருவிபோன்றன கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாகப் பொலீஸாருக்கு அறிவித்தார்.

மாணவியைத் தேடும் முயற்சிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டன. மாணவிநடைப்பயிற்சிக்குச் சென்ற மரங்கள்அடர்ந்த வனப் பகுதி முழுவதும் சுமார்200 ஜொந்தாம் பொலீஸார் ஹெலிக்கொப்ரர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதலைத் தொடங்கினர்.

பிரதேச மக்கள் உஷார்ப்படுத்தப்பட்டனர். மாணவிக்கு என்ன நடந்தது என்ற செய்தி அறிய முழு நாடுமே காத்திருந்தது.

எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. சந்தேகத்தில் நபர் ஒருவரைக் கைதுசெய்து தடுத்துவைத்தனர். ஆனால் மாணவியைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

24 மணிநேரம் கடந்து மறு நாள் மாலைஅந்த மாணவி உடலில் கீறல் போன்ற காயங்களுடன் அப்பகுதியில் உள்ளஉணவகம் ஒன்றில் தஞ்சமடைந்தார். பச்சை நிற வான் ஒன்றில் வந்த இருவர் தன்னைத் தாக்கிக் கடத்திச் சென்று வீடு ஒன்றில் தடுத்து வைத்திருந்தனர் என்றும் அவர்கள் பிடியில் இருந்து தப்பி ஓடி வந்ததாகவும் பெரும் அதிர்ச்சி அடைந்தவராகக் காணப்பட்ட மாணவி உணவக உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

மாணவி உயிருடன் மீண்ட செய்தி அறிந்து அவரது குடும்பத்தினரும் பொலீஸாரும் நகர மக்களும் நிம்மதிஅடைந்தனர். கடத்தல்காரர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்காகப் பொலீஸார் தேடுதல்களைத் தொடர்ந்தனர். அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்காக மாணவிக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்துவிட்டு இன்று அவரை மீண்டும் அதிகாரிகள் விசாரணை செய்தபோது அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

கடத்தப்பட்டதாகத் தான் பொய் கூறினார்என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். தன்னைக் கண்டுபிடிப்பதற்காகப் பெரும் தேடுதல்களை நடத்த நேர்ந்தமைக்காகவிசாரணையாளர்களிடம் மன்னிப்புக் கோரினார் அந்த மாணவி. இன்று அரச சட்டவாளர் இந்தத் தகவல்களை நாட்டு க்கு அறிவித்த போது அந்தக் கடத்தல் தொடர்பாகப் பரபரப்பான புதிய பல செய்திகளை அறியக் காத்திருந்தோர் பெரும் ஏமாற்றமடைய நேரிட்டது.

மாணவி கத்தரிக்கோல் ஒன்றினால்தன் சட்டைகளைக் கிழித்தும் சிறு கீறல் காயங்களை ஏற்படுத்தியும் தான் கடத்தப்பட்டமை போன்று நாடகமாடியுள்ளார் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. என்ன நோக்கத்துக்காக அவர் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதும் அவர் அன்றைய இரவை எங்கே கழித்தார் என்பன போன்ற விவரங்களும் வெளியிடப்படவில்லை.

மாணவி காணாமற் போன நாளில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து அவரது நடத்தைக்குக் காரணமான பின்னணிகளை அறிவதற்காக விசாரணைகள் வேறு கோணத்தில் திருப்பப்பட்டுள்ளன.

அந்த மாணவி இருவர் தன்னைக் கடத்தி ஒரு வீட்டில்மறைத்து வைத்திருந்தனர் என்றவாறு “கற்பனையில் ஒரு புனைவுக் குற்றச் செயலை புரிந்துள்ளார்” (denunciation of imaginary offense) என்ற வகையில் அவர் மீது குற்ற விசாரணை நடத்தப்படலாம் என்பதை அரச சட்டவாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்காக அவருக்கு ஆறுமாதங்கள் சிறை மற்றும் 7,500 ஈரோக்கள் அபராதத்தை உள்ளடக்கிய தண்டனையும் விதிக்கப்படலாம்.-

-குமாரதாஸன். பாரிஸ்.