பெரும் நட்டத்தைச் சந்தித்திருக்கும் அஸ்ரா-செனகா நிறுவனம் இனிமேல் தயாரித்த விலைக்கு கொவிட் 19 தடுப்பு மருந்தை விற்காது!

கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துத் தயாரித்து விற்க ஆரம்பித்த காலம் முதல் அது “தயாரிப்புச் செலவு விலைக்கே விற்கப்படும்,” என்று தெரிவித்து வந்த அஸ்ரா செனகா இனிமேல் தனது விலையை அதிகரிக்கப் போவதாக அறிவிக்கிறது. காரணம், மூன்றாவது காலாண்டில் நிறுவனம் 2 பில்லியன் டொலர்கள் நட்டமடைந்திருப்பதாகும். கடந்த வருடம் அதே காலாண்டில் அந்த நிறுவனம் 850 மில்லியன் டொலர்களை இலாபமாகக் காட்டியிருந்தது.

தனது நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையை வெளியிட்ட அஸ்ரா செனகா நிலைமையைச் சுட்டிக்காட்டி இனிமேல் தாம் கொவிட் 19 தடுப்பு மருந்து மூலம் இலாபம் சம்பாதிக்கவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதே கொடும் வியாதிக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விற்றுவரும் பைசர் நிறுவனமோ 20 % இலாபத்தைக் காட்டியிருக்கிறது.

இதுவரை 580 மில்லியன் கொவிட் 19 தடுப்பூசியை உலகம் முழுவதும் விற்றிருக்கும் அஸ்ரா செனகா இனிமேல் வறிய நாடுகளுக்கு மட்டுமே தயாரிப்பு விலைக்குத் தனது தடுப்பு மருந்தை விற்பனை செய்யும். 

சாள்ஸ் ஜெ. போமன்