தம்பட்டமடித்துக்கொள்ளும் டொனால்ட் டிரம்ப்பின் உத்தியோகபூர்வமான இறுதிப் பேச்சு!
“உலகிலேயே பெரிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினோம், உலகிலேயே பெரிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பினோம்,……..” என்று தனது ஜனாதிபதிக் காலத்தின் கடைசிப் பேச்சில் டிரம்ப் குறிப்பிட்டார், முடிந்தவரை 400,000 அமெரிக்கர்கள் கொவிட் 19 இல் இறந்ததைக் குறிப்பிடுவதைத் தவிர்த்து.
மற்றைய நாடுகளுடனான அமெரிக்காவுக்கு இலாபம் தராத, பயன் தராத ஒப்பந்தங்களிலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டது என்று காலநிலை பேணுவதற்கான ஒப்பந்தத்தை ஒதுக்கிவைத்துவிட்டது பற்றியும் குறிப்பிட்டார். தனது முக்கிய சாதனையாக அமெரிக்காவின் பொருளாதாரத்தை உலகச் சரித்திரத்திலேயே மிகப்பெரிய பொருளாதாரமாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
வரிச்சுமைகளைக் குறைத்தது, நாட்டின் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வளர்ச்சி போன்றவைகளுக்குத் தனது அரசியலைக் காரணமாகக் கூறிக்கொண்ட டிரம்ப் முடிந்தவரை கொரோனாக் கிருமிகளின் பரவலால் அமெரிக்காவின் மருத்துவ சேவை அமைப்புக்கள் நிலைகுலைந்து போயிருப்பதைக் குறிப்பிடுவதைத் தவிர்த்தார். அதேசமயம் கொவிட் 19 க்காகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தடுப்புமருந்துகளுகான வெற்றியைத் தனதென்று குறிப்பிட்டார்.
ஜனவரி 06ம் திகதியன்று வாஷிங்டனின் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் தனது ஆதரவாளர்கள் புகுந்து நடத்திய அழிவுகளைக் குறிப்பிட்டுத் தான் அரசியல் வன்முறைகள் எல்லாவற்றுக்கும் எதிரானவன் என்று குறிப்பிட்டார். வலது அல்லது இடதுசாரி அமைப்புக்கள் எதுவானாலும் வன்முறையில் இறங்குவது அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அவர் குறிப்பிட்டார்.
தனது பேச்சினிடையே வெள்ளை மாளிகைக்குப் புதிய ஒரு நிர்வாகம் வரவிருப்பதாகக் குறிப்பிட்டு அவர்களுடைய வெற்றிக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் டிரம்ப். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் புதிய ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிடுவதை அவர் தவிர்த்தார்.
டிரம்ப்பின் மேற்கண்ட பேச்சு வெளியிடப்பட முன்னரே அவரது ரிபப்ளிகன் கட்சியின் செனட் சபையின் தலைவர் மிச் மக்டொனால்ட் டிரம்ப் தனது பொது அறிக்கைகள், பேச்சுக்கள் மூலம் பொய்களையும், திரிபுபடுத்திய செய்திகளையும் தனது ஆதரவாளர்களுக்குச் சொல்லி அவர்களை உசுப்பிவிட்டதாலேயே அவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
பதவியிலிருந்து விலகிச் செல்லும் டிரம்ப் அமெரிக்க மக்களைப் பிரித்திருப்பது மட்டுமன்றி தனது ரிபப்ளிகன் கட்சியையும் பிளவுபடுத்தியிருக்கிறான் என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். தேசியவாதிகளை உசுப்பிவிட்டதன் மூலம் அவர்கள் புதிய ஒரு கட்சி ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்திலிருப்பதாகவும் டிரம்ப் அதற்குத் தலைமை தாங்கலாம் என்றும் ஆரூடங்கள் கூறப்படுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்