எலக்டர் என்று குறிப்பிடப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்களின் பிரதிநிதிகள் கூடி ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நாள் வந்தாயிற்று!

ஒழுங்கையில் ஓடும் மாட்டுவண்டிபோன்ற அமெரிக்க தேர்தல் வழியின் கடைசி தினமாக வரும் எலக்டர்கள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நாள் பொதுவாக கவனிப்புக்கு உள்ளாவதில்லை. இவ்வருடத் தேர்தலின் பின் வரும் அந்த நாள் டிசம்பர் 14 திங்களாகும்.

இந்த நாள் பெரும் விளம்பரத்துக்கு உள்ளாகியிருக்கிறது என்றால் அதன் காரணம், வாரங்கள் சிலவற்றுக்கு முன்னர் நிறைவாகி விட்ட தேர்தல் முடிவை ஜனாதிபதி டிரம்ப் ஏற்றுக்கொள்ளாதது தான். ஆதாரங்களேதுமில்லாமல் அத்தேர்தலெல்லாம் ஏமாற்று வேலையென்று சொல்வது மற்றுமன்றிப் பல வழக்குகளையும் போட்டு தேர்தல் முடிவைச் செல்லுபடியாததாக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார் டிரம்ப்.

இதுவரை வெளியாகியிருக்கும் மாநில நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றங்களெல்லாம் மில்லியன்கள் செலவழித்து டிரம்ப் போட்டிருக்கும் வழக்குகளை ஓரிரு வரிகளிலேயே தூக்கியெறிந்தே வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்காளர்கள் தங்கள் கட்சி எலக்டர்களுக்கு வாக்களிக்க அவர்களில் அதிக வாக்குகளை வென்றவர்களின் கட்சிக்கு சகல இடங்களும் கிடைக்கும். மொத்த எலக்டர்களின் எண்ணிக்கை 538. அவர்களில் பெரும்பான்மையானவர்களை இத்தேர்தலில் வென்றவர் ஜோ பைடன். 

ஆனால், தன் கட்சி ஆளும் மாநிலக் கவர்னர்களை அணுகி அவர்கள் மூலம் தானே வென்றதாகக் கூறி வென்ற கட்சிக்கார எலக்டர்களை மறுக்கச் செய்யவும் டிரம்ப் கேட்டு மூக்குடைக்கப்பட்டிருக்கிறார். அதன் காரணமாக பத்தோடு பதினொன்றாகக் கடந்துபோகும் இந்த எலக்டர்கள் கூடும் நாள் முக்கியமானதாகிவிட்டிருக்கிறது. ஜோ பைடன் 306 எலக்டர்களையும், டிரமப் 232 எலக்டர்களையும் வென்றிருக்கிறார்கள்.

இன்று தத்தம் மாநிலங்களில் எலக்டர்கள் கூடித் தத்தம் வாக்குகளை அதற்கான காகிதத் தேர்தல் படிவங்களில் குறிப்பிட்டு வாஷிங்டனுக்கு அனுப்பிவைப்பார்கள். அமெரிக்க தேர்தல் சரித்திரத்தில் எலக்டர்கள் எதிர்கட்சி வேட்பாளருக்கு வாக்குகளை இட்டதில்லை.  

ஜனவரி 6 ம் தேதி பாராளுமன்றத்தின் இரண்டு சபையின் பிரதிநிதிகள் எல்லோரும் கூடுவார்கள். அவ்வாக்குப் பெட்டிகளை உப ஜனாதிபதி திறந்து, எண்ணி முடிவை அறிவிப்பது என்பது சம்பிரதாயம். தேர்தல் முடிவுகளில் வென்றவர் யாரென்று தெரிந்தாலும்கூட, அப்போதுதான் உத்தியோகபூர்வமாகப் புதிய ஜனாதிபதி யாரென்பது வெளியிடப்படும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *