இடதுசாரிக் கூட்டணி வென்றால் பாரிஸ் மாணவருக்கு சைக்கிள்கள் ! பசுமைக் கட்சித் தலைவர் அறிவிப்பு

பாரிஸ் பிராந்திய சபையை சூழலியல்கட்சியை உள்ளடக்கிய இடதுசாரிக் கூட்டணி கைப்பற்றுமானால் உயர் தர மாணவர்கள் அனைவருக்கும் இலவச மாகச் சைக்கிள்கள் வழங்கப்படும்.

ஐரோப்பிய சூழலியல் பசுமைக் கட்சியின் (Europe Écologie Les Verts)தலைமை வேட்பாளர் ஜூலியன் பயோ (Julien Bayou) இவ்வாறு அறிவித்திருக்கிறார்.

பாரிஸ் பிராந்திய சபைத் தேர்தலில் இரண்டாவது சுற்று வாக்களிப்பை எதிர்கொள்வதற்காக சோசலிஸக் கட்சி உட்பட இடது சாரிகளுடன் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ள அவர், தமது இறுதிக்கட்ட வாக்குறுதிகளை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டார்.

வாகனங்களை அகற்றிவிட்டு பாரிஸ் நகரை முழுவதும் பசுமை நகரமாக மாற்றுகின்ற தமது திட்டங்களில் ஒன்றாகவே உயர் பள்ளி மாணவருக்கு சைக்கிள்களை வழங்கவுள்ளதாக அவர் அறிவித்தார்.

ஓரிரு கிலோ மீற்றர்கள் தூரங்களுக்குப் பயணம் செய்யப் பொதுப் போக்குவரத்துகளை நாடுகின்ற நிலை மாற்றி அமைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். பிரான்ஸில் பிராந்திய சபைகளுக்கான தேர்தல்களின் இரண்டாம் சுற்று வாக்க ளிப்பு நாளை மறுதினம் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முதல் சுற்றில் வாக்களிப்புவீதம் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது. முதல் சுற்றில் பெற்ற வாக்குவெற்றிகளின் அடிப்படையில் இரண்டாவது சுற்றை எதிர்கொள்வதற்காகக் கட்சிகள் தமக்குள் புதிய கூட்டணிகளைஅமைத்துப் புதிய அரசியல் வியூகங்களை வகுத்துவருகின்றன.

கடந்த ஞாயிறன்று நடந்த முதலாவது சுற்றில் ரிப்பப்ளிக்கன் கட்சியின்முன்னாள் உறுப்பினர் வலேரி பெக்ரெஸ் 35.94% வீத வாக்குகள் பெற்று முதனிலைஅடைந்தார். இல்-து-பிரான்ஸ் என்கின்றபாரிஸ் பிராந்திய சபையின் தலைவியாக அவர் கடந்த ஆறு ஆண்டு காலம் அப்பதவியில் நீடித்து வருகிறார். இந்த முறையும் முதல் சுற்று வாக்களிப்பில் முதலிடத்தில் வந்துள்ள அவரை இரண்டாவது சுற்றில் எப்படியாவது தோற்கடிப்பதற்காக அடுத்தடுத்த இடங்களில் உள்ள இடது சாரிக் கட்சிகள் இணைந்து சூழலியல் கட்சி தலைமையில் திரண்டு புதிய கூட்டணி ஒன்றை அமைத்துள்ளன.

பிரான்ஸின் சோசலிஸக் கட்சியும் அக் கூட்டணியில் அடங்கியுள்ளளது. சோசலிஸக் கட்சி (PS) சார்பில் போட்டியிட்ட பாரிஸ் நகரசபை துணை முதல்வர் உத்ரேய் புல்வார் முதலாவது சுற்றில் 13%வீத வாக்குகளையே பெற்றார்.தேர்தலில் வென்றால் இல் – து-பிரான்ஸ் பிராந்தியம் முழுவதும்பொதுப் போக்குவரத்துகள் இலவசமாக நடத்தப்படும் என்று பிரசாரத்தின் போது அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.

பிராந்திய சபைகள் மற்றும் மாவட்ட சபைகளுக்கான தேர்தல்களின் முதற் சுற்றுஅதிபர் மக்ரோனின் ஆளும் கட்சிக்கும்மரீன் லூ பென்னின் தீவிர வலதுசாரிகட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வலதுசாரி ரிப்பப்ளிக்கன் அணியினர் பரவலாக வாக்குகளைப் பெற்று வலுவான நிலைக்கு முன்னேறி உள்ளனர்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *