எல்லாரும் தம்மை அடையாளம் கண்டுகொள்ளப் போகும் ஒரு சின்னம் – கமலா ஹாரிஸ்.
“உலகின் சிறார்களெல்லாம் எதையும், எவராலும் சாதிக்கமுடியும் என்று புரிந்துகொள்வார்கள், அதுதான் ஐக்கிய அமெரிக்கா,” என்று கமலா ஹாரிஸ் உப ஜனாதிபதி பதவியேற்க முன்னர் அறிமுகப்படுத்தினார். கமலா தேவி ஹாரிஸ் ஜனவரி 20 திகதியன்று அமெரிக்காவின் பாராளுமன்றக் கட்டடத்தின் வாசலினூடாக வெளியே இறங்கும்போது ஒரே உருவில் பற்பல கோணங்களைப் பிரதிநிதிப்படுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது.
அமெரிக்காவின் இரண்டாவது அதியுயர்ந்த பதவியை அடையும் ஒரு பெண், கறுப்பின, ஆசிய இனத்தவரின் வழிவந்தவர். கமலா ஹாரிஸுக்கு அருகே கூட்டிவருபவராக யூஜீன் குட்மான். கருப்பினத்தினரான யூஜீன் குட்மான் இரண்டே வாரங்களுக்கு முன்னர் இதே பாராளுமன்றக் கட்டடம் வன்முறைக் கூட்டத்தால் தாக்கப்படும்போது பொறுமையாக, புத்திசாலித்தனமாக அக்கூட்டம் செனட் சபைக்குள் நுழையாமல் ஒதுக்கியதன் மூலம் பிரபலமானவர்.
கமலா ஹாரிஸுக்கு உறுதிமொழியை வாசித்தவர் சோனியா ஸோடொமாயர், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் லத்தீனமெரிக்க வம்சாவழியில் வந்த முதலாவது பெண்மணி. மனைவிக்காகக் கையில் விவிலியத்தை ஏந்தியவர் டக்ளஸ் எம்ஹோவ், அமெரிக்காவின் முதலாவது [ Second Gentleman] இரண்டாவது நன்மகன்கணவன். இவையெல்லாம் ஒரே சந்தர்ப்பத்தில் பல “முதல் முதலாக” நடப்பவை.
அமெரிக்கா என்றால் கறுப்பினத்தவர் ஒதுக்கப்படுவது என்ற காலம் மாறிவரத் தேவையான நடவடிக்கைகளை கமலா ஹாரிஸ் எடுப்பாரென்ற எதிர்பார்ப்பு பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. முக்கியமாகக் கடந்த வருட நடுப்பகுதியில் அமெரிக்காவெங்கும் பொங்கியெழுந்த “கறுப்பர்களின் உயிரும் மதிப்புக்குரியதே” என்ற அமைப்பின் பேரணிகள் நாட்டில் ஆன்மாவில் நீண்டகாலமாக இருக்கும் பிளவை அடையாளம் காட்டுகிறது.
“எனது பொறுப்பும் வெள்ளை மாளிகைக்குப் புதியது. எனவே இங்கே கமலா, ஜில், ஜோ ஆகியோருக்கு அவர்களுடைய திட்டங்களைச் செய்ய உதவுவதுடன் எதிர்காலத்தில் இந்தப் பதவியில் வரப்போகிறவர்களுக்கு நான் ஒரு முன்மாதிரிகையாக நடக்கவேண்டும். தனிப்பட்ட முறையில் “நீதியை எல்லோருக்கும் கிடைக்கச்செய்தல்” என்பது எனது குறியாக இருக்கும்,” என்கிறார் வக்கீலான, வக்கீல்களுக்குக் கற்பிப்பவரான கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எம்ஹோவ்.
சாள்ஸ் ஜெ. போமன்