தடுப்பு மருந்தால் மற்றைய நாடுகளில் என்னாகிறது என்று கவனித்துக்கொண்டிருக்கும் ஆஸ்ரேலியா.
உலகில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொண்ட நாடுகளெல்லாம் வெகு வேகமாக தத்தம் நாட்டவருக்கு அவைகளைக் கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்க ஆஸ்ரேலியா “கவனித்துக்கொண்டு முடிவெடுப்போம்,” என்ற நோக்கிலிருக்கிறது. பெப்ரவரி – மார்ச் மாதங்களில் தான் அங்கே தடுப்பு மருந்துகள் பொதுமக்களுக்குக் கொடுப்பது ஆரம்பமாகும்.
தனது நாட்டின் மருத்துவ சேவையாளர்கள், நீண்டகால முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள், தனிப்படுத்தப்பட்டோருக்குச் சேவை செய்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே முதல் கட்டமாகத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
தனது தேவைக்கான தடுப்பு மருந்துகளை ஆஸ்ரேலியா வாங்கித் தயார்செய்துகொண்டு அவற்றைப் பொதுமக்களுக்குக் கொடுப்பதற்காகக் காத்திருக்கப்போகிறது. மற்றைய நாடுகளில் தடுப்பு மருந்துகளைப் பெற்றவர்களின் நிலையைக் கவனித்துக்கொண்டு மார்ச் மாதமுடிவில் தனது 4 மில்லியன் மக்களுக்குத் தடுப்பு மருந்தைக் கொடுத்துவிட்டு மீதமிருப்பவர்களுக்குக் கொடுப்பதை ஒக்டோபர் வரை தள்ளிப்போட்டிருக்கிறது.
“உலக நாடுகளெல்லாம் தடுப்பு மருந்துகளை அவசர அவசரமாக விநியோகிப்பது போல நாம் செய்யவேண்டியதில்லை. அதன் விளைவுகள் என்னாகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும்வரை எங்கள் மக்களை அதனால் தீமையெதுவும் நடக்காமல் காப்பாற்றப் போகிறோம்,” என்கிறார் பிரதமர் ஸ்கொட் மொரிஸன்.
ஆஸ்ரேலிய அரசின் இந்தப் “பொறுத்திருத்தல்” சில தொற்றுநோய் பரவல் தடுப்பு மருத்துவர்களின் கடுமையான விமர்சனங்களைப் பெறாமலில்லை. சுமார் 28,000 ஆஸ்ரேலியர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு சுமார் 925 பேர் இறந்திருக்கிறார்கள். “இந்த நோய்ப் பரவல் அதிகரிக்கமுதல் செயற்படுவதே நல்லது. இதுவரை கவனித்ததிலிருந்து தடுப்பு மருந்துகள் நற்பலன்களையே தருகின்றன,” என்கிறார்கள் அவர்கள்.
முதலில் மார்ச் மாதம் முடியும்வரை காத்திருப்பதற்கான முடிவை எடுத்திருந்த ஆஸ்ரேலிய அரசு தற்போது பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் பொதுமக்களுக்குக் கொடுக்க ஆரம்பிக்க முடிவெடுத்திருக்கிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவைகளில் தடுப்பு மருந்துகள் வினியோகிக்க ஆரம்பித்திருந்தாலும் அவை பிரிட்டன், இஸ்ராயேல், டென்மார்க், எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் போன்று வேகமாக இல்லை என்ற விமர்சனம் ஐரோப்பிய ஒன்றியத்திலும் எழுந்திருக்கிறது. ஆஸ்ரேலியா 53.8 மில்லியன் அஸ்ரா – ஸெனகா மருந்துகளையும் 10 மில்லியன் Pfizers/Biontech
மருந்துகளையும் கொள்வனவு செய்து தயாராக இருக்கிறது. அதிலும் எந்த மருந்தைப் பாவிப்பது என்பது இன்னொரு வாதமாக எழுந்திருக்கிறது. Pfizers/Biontech , மொடர்னா நிறுவனத்தின் மருந்துகள் 90 விகிதத்துக்கும் மேலான எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்க அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்து எவ்வளவு மருந்து கொடுப்பது என்பதைப் பொறுத்து 62 முதல் 90 விகித எதிர்ப்புச் சக்தியையே கொடுக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஒரு ஆராய்ச்சியாளர்.
எனவே Pfizers/Biontech மற்றும் மொடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்துகளை ஆஸ்ரேலியா இன்னும் அதிகமாக வாங்கிக்கொள்ளவேண்டுமென்று அந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்