வடகிழக்கு எல்லையிலிருக்கும் பவளப்பாறைகளைப் புனருத்தாரணம் செய்யும் திட்டத்தை ஆஸ்ரேலியா அறிவித்தது.

ஆஸ்ரேலியாவின் எல்லைத்தடுப்புப் பவளப்பாறைகள் [Great Barrier Reef]  மில்லியன்களுக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து நாட்டுக்குக் கணிசமான வருமானத்தைக் கொடுப்பவை. பல வருடங்களாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றங்களால் அவை அழிந்துபோகும் ஆபத்திலிருக்கின்றன.

சுமார் 2,300 கி.மீற்றர் தூரத்தில் படந்திருக்கும் மூவாயிரத்துக்கும் அதிகமான தனித்தனியான பவளப்பாறை அமைப்புக்களைக் கொண்டது எல்லைத்தடுப்புப் பவளப்பாறைகள். அவை கடந்த 30 வருடங்களாகத் தமது பாதியின் தனித்தன்மையை இழந்திருக்கின்றன. காரணம் அப்பகுதியில் கடல்நீர் வெம்மையாகியிருப்பதாகும். 

அந்தப் பவளப்பாறைகளைப் புனருத்தாரணம் செய்யவும், காப்பாற்றவும் ஒரு பில்லியன் ஆஸ்ரேலிய டொலரை வரவிருக்கும் 9 வருடங்களுக்குச் செலவழிக்கவிருப்பதாகப் பிரதமர் ஸ்கொட் மொரிஸன் வெள்ளியன்று அறிவித்திருக்கிறார். அதில் பாதி நாட்டின் விவசாயிகள் சூழலுக்குப் பாதகமான உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பாவிக்காமல் தடுப்பதற்காகச் செலவிடப்படும். மற்றைய பகுதி பவளப்பாறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய தாவரங்கள் ஆக்கிரமிப்புச் செய்யாமலிருக்கத் தடுப்பதற்காகச் செலவழிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஸ்கொட் மொரிஸன் அறிவித்திருக்கும் திட்டம் நாட்டின் சுற்றுப்புற சூழல் பேணும் அமைப்புக்களைக் கவரவில்லை. தொடர்ந்தும் பெருமளவில் நிலக்கரிச் சுரங்கங்களை இயங்கவைத்து, அதன் எரிசக்தியால் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு ஆதரவளித்துவரும் அவரது பவளப்பாறை காக்கும் திட்டம் வெறும் முகப்பூச்சே என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். நாட்டின் தொழில்துறை பெருமளவில் தொடர்ந்தும் சூழலை அழிக்கும் வகையில் இயங்குவதை ஊக்குவிப்பதால் பவளப்பாறைகளை புனருத்தாரணம் செய்யும் திட்டம் வெற்றிபெற வாய்ப்பில்லை என்று அவர்கள் கணிக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்