இந்தியாவில் கடந்த வருடத்தைவிட அதிகமாக இவ்வருடம் தங்க விற்பனை அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

கழிந்த ஆறு வருடங்களுடன் ஒப்பிடும்போது 2022 இல் தங்க விற்பனை இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. கடந்த அருடம் 797.3 தொன் தங்கம் இந்தியாவில் கொள்வனவு செய்யப்பட்டது. அது இவ்வருடம் 800 – 850 தொன் ஆக அதிகரிக்கும் என்று உலக தங்க விற்பனை மையத்தில் இந்தியச் செயலாளர் குறிப்பிடுகிறார்.

கடந்த பத்து வருடங்களின் இந்தியத் தங்க விற்பனை சராசரியாக 769.7 தொன்னாக இருக்கிறது. அதன் விற்பனை அதிகரிப்பது உலகப் பொருளாதாரத்துக்கு ஊட்டச்சக்தி கொடுப்பதாக இருக்கும். அதேசமயம் இந்தியாவின் வணிகப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும். அது இந்திய ரூபாயின் மதிப்பை மேலும் இழக்க வைக்கும். 

உலகில் அதிகத் தங்கக் கொள்வனவு செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்திலிருக்கிறது. கடந்த வருடங்களில் இந்திய அரசு நடைமுறைப்படுத்திய கொரோனாப் பொதுமுடக்கங்களால் பலர் திருமணங்களைத் தள்ளிப்போட்டனர். அவர்களில் பலர் 2022 இல் தமது திருமணங்களை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தியத் திருமணங்களில் தங்கத்தின் பாகம் மிக முக்கியமானதாகும் என்பதைக் குறிப்பிட்டே அதன் கொள்வனவு பெருமளவு அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

பத்து கிராம் தங்கம் 48,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அது இவ்வருடம் ஓகஸ்ட் மாதமளவில் 56,000 இந்திய ரூபாயை விட அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்