அமர்நாத் யாத்திரையைத் திட்டமிட்டது போல நடத்தி முடிக்க இந்தியா முடிவெடுத்திருக்கிறது.

இமாலயத்தில் 3,880 மீற்றர் உயரத்திலிருக்கும் அமர்நாத் குகைக் கோவிலுக்கு  600,000 இந்து யாத்திரிகையாளர்களை எதிர்பார்த்து கொட்டகை போன்ற வசதிகள் தயாராகின்றன. உத்தர்காண்டில் சமீபத்தில் நடாத்தப்பட்ட கும்பமேளா கொரோனாத் தொற்றைப் படுவேகமாகப் பரப்புவதற்குக் காரணமாக இருந்ததாகப் பலர் விமர்சித்தாலும் கூட இந்தியப் பகுதியிலிருக்கும் காஷ்மீர் அரசு அமர்நாத் யாத்திரிகையாளர்களைத் தடுக்க முயலவில்லை. 

பல்தால், சந்தன்வாரி என்ற இரண்டு இடங்களில் அமைக்கப்படவிருக்கும் தற்காலிகக் கூடாரங்களுக்கு யாத்திரிகையாளர்கள் வந்துகால் நடையாக அமர்நாத் குகைக்குப் போவதற்கான வசதிகள் செய்யப்படுகின்றன. சந்தன்வாரியிலிருந்து ஏறுகிறவர்கள் 32 கி.மீற்றர்கள் நடந்து சிவலிங்க ரூபத்தில் குகைக்குள் வந்து விழும் உறைபனியைத் தரிசிக்கப் போவார்கள். பல்தாலிருந்து அக்குகை 14 கி.மீற்றர்கள் தூரத்திலிருக்கிறது. 

ஜூன் 28, ஆகஸ்ட் 22 ஆகிய திகதிகளில் நடக்கவிருக்கும் இந்த யாத்திரைக்கான இணையத்தள அனுமதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும் திட்டமிட்டது போல யாத்திரை நடக்குமென்றே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜனவரி 28 ம் திகதியே இதற்கான திட்டங்கள் வெளியிடப்பட்டன. 

பலரை ஒரேயிடத்தில் சந்திக்கவைக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் மக்களுக்கு மந்தைப் பாதுகாப்பை (herd immunity) என்ற சில தவறான கணக்கீடே இதை அரசு அனுமதித்ததற்குக் காரணம் என்று சில மருத்துவ அதிகாரிகள் விமர்சிக்கின்றனர். அத்துடன் ஆளும் பாஜக, காஷ்மீரப் பகுதியில் நிலைமை சகஜமாகிவிட்டது என்று காட்டுவதற்காகவும், அதன் மூலம் சுற்றுலாப் பயணிகளை அங்கே ஈர்ப்பதற்காகவும் அமர்நாத் யாத்திரையைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.

2019 இல் காஷ்மீருக்கு இந்தியா அதுவரை கொடுத்திருந்த பிரத்தியேக உரிமைகளை நிறுத்தியதாலும், 2020 கொரோனாப் பரவலின் முதலாவது அலையினாலும் அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வருட யாத்திரைக்கு சுமார் 30,000 பேர் அனுமதி பெற்றிருப்பதாகத் தெரிகிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *