தடுப்பு மருந்துக்கெதிரான பொய்ச்செய்திகளைத் தவிர்க்காத ஸ்போட்டிவையிலிருந்து விலகினார் நீல் யங்.

சர்வதேசப் பிரபலம் பெற்ற ரொக் இசைக் கலைஞர் நீல் யங் தனது இசையை ஸ்போட்டிவை [Spotify] தளத்திலிருந்து முழுவதுமாக அகற்றும்படி முடிவெடுத்திருக்கிறார். மாதத்துக்கு ஆறு மில்லியன் பேர் அவரது இசையை அத்தளத்தில் கேட்கிறார்கள், அவரை அங்கே தொடர்பவர்களோ 2.4 மில்லியன் பேர்.

ஸ்போட்டிவை நிறுவனம் ரொக் கலைஞரின் முடிவுக்குக் கவலை தெரிவித்திருக்கிறது. அவரை மீண்டும் திரும்பும்படி வேண்டிக்கொண்டிருக்கிறது. 

ஜோ ரோகன்ஸ் என்ற தடுப்பூசி மறுப்பாளர்களின் நட்சத்திரத்தின் பொட் காஸ்ட்களை அந்தத் தளத்திலிருந்து அகற்றும்படி நீல் யங் கோரி வந்தார். ஸ்போர்ட்டிவை நிறுவனத்தின் பொட்களில் மிகப் பிரபலமானது “தெ ஜோ ரோகன்ஸ் எக்ஸ்பீரியன்ஸ்” ஆகும். அதற்கான தனிப்பட்ட உரிமைகளை வாங்கிக்கொள்ள ஸ்போட்டிவை 100 மில்லியன் டொலர் கொடுத்திருக்கிறது. அதில் ரோகன்ஸ் கொவிட் 19 என்ற வியாதி உண்மையிலேயே இருக்கிறதா என்பது முதல் அதற்கான தடுப்பு மருந்துகள் பற்றிய சதிக்கதைகள் பலவற்றையும் வெளியிட்டு வருகிறார். 

“ஸ்போட்டிவை உயிருக்கு ஆபத்து விளைவுக்கும் பொய்களைப் பரப்பும் தளமாகிவிட்டது. அவர்கள் ரோகன் வேண்டுமா யங் வேண்டுமா என்று தெரிவு செய்யட்டும். இரண்டையும் ஒரே தளத்தில் வைத்திருக்க முடியாது,” என்கிறார் நீல் யங்.

ரோகன் தனது பேச்சுக்களில் வெளியிடும் கதைகள் மிகவும் ஆபத்தானவை, சமூகத்துக்குத் தீமை விளைவிப்பவை என்று பல விற்பன்னர்களும் நீண்ட காலமாகவே சுட்டிக்காட்டி வருகிறார்கள். இவ்வருட ஆரம்பத்தில் வெவ்வேறு துறையைச் சேர்ந்த 270 சர்வதேச அறிஞர்கள் ஸ்போட்டிவை ரோகனின் பேச்சுக்களை அத்தளத்திலிருந்து கேட்டுக்கொண்டார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்