பொபி வைனை வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கும்படி உகண்டா நீதிமன்றம் உத்தரவு.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் உகண்டாவில் நடந்த தேர்தல் முடிவுகள் வரமுன்னரே தனக்கெதிராகப் போட்டியிட்ட வேட்பாளர் பொபி வைனை வீட்டுச் சீறையில் இராணுவப் பாதுகாப்பில் வைத்துவிட்டார் ஜனாதிபதி முஸவேனி.
முஸவேனி தானே தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவித்தது ஏமாற்று என்று குறிப்பிட்டு வீட்டிலிருந்தபடியே வெளிநாட்டு ஊடகங்களுக்குப் பேட்டியளித்திருந்தார் பொபி வைன். அவர் தனது உயிருக்கும் பாதுகாப்பு இல்லையென்று குறிப்பிட்டு நாட்டின் நீதிமன்றத்தில் தன்னை வீட்டை விட்டு வெளியேறிச் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கும்படி கேட்டிருந்தார். அதையடுத்தே நீதிமன்றம் அவரது விடுதலைக்காக உத்தரவிட்டிருக்கிறது.
நீதிமன்றத்தின் உத்தரவைத் தாம் அறிவோமென்றும், அதன்படி நடப்போமென்றும் குறிப்பிட்டிருக்கும் இராணுவம் அவர் வெளியே செல்லும்போது தமது பாதுகாப்புடனேயே நடமாடவேண்டுமென்கிறது. அவரது நடமாட்டம் நாட்டில் கலவரத்தை உண்டாக்கலாமென்பதைத் தடுப்பதற்காகவே முன்னெச்சரிக்கையாக அதைச் செய்வதாக இராணுவம் குறிப்பிடுகிறது.
தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குப் போடுவதைப் பற்றித் தான் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று குறிப்பிடுகிறார் பொபி வைன். அவரை விடுவிக்கும்படி அமெரிக்கா, அம்னெஸ்டி அமைப்பு உட்பட பல உலக நாடுகளும் முஸவேனியிடம் குறிப்பிட்டு வருகின்றன. அமெரிக்கத் தூதுவர் பொபி வைன் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்திக்க முயன்றதை இராணுவம் தடுத்துவிட்டது. தமது நாட்டின் உள்நாட்டு விடயங்களில் தலையிடவேண்டாமென்று முஸவேனி சுட்டிக்காட்டி அதை அனுமதிக்கவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்