சர்வதேச காலநிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மீண்டும் திரும்பும் அமெரிக்கா.
தொலைத்தொடர்புகள் மூலம் நடந்துகொண்டிருக்கும் காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிடும் மாநாட்டில் [Climate Adaptation Summit] அமெரிக்காவின் பிரதிநிதி ஜோன் காரி பேசும்போது கடந்த வருடங்களில் அவ்விடயங்களிலிருந்து அமெரிக்கா விலகியிருந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
“நாம் 3.5 பாகையிலிருந்து 4.7 பாகை செல்ஸியஸால் சூடாகிக்கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த வேகமான தட்ப வெப்ப மாறுதலைப் பல வறிய நாட்டு மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதே உண்மை. சில பணக்கார நாடுகளால் மட்டுமே இந்த நிலைமைக்கு ஏற்றபடி தம்மை மாற்றிக்கொள்ள முடியும்,” என்று குறிப்பிட்டார் ஜோன் காரி.
உலகின் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இரண்டு நாட்களுக்குப் பங்குபற்றப்போகும் இந்த மாநாட்டில் அமெரிக்கா முதலாவது வரியிலிருந்து அதற்கான நடவடிக்கைகளைச் செய்யத் தயார் என்று குறிப்பிடுகிறது. புதிய அமெரிக்க நிர்வாகத்தின் சார்பில் ஜோன் காரி கொடுத்த உறுதிமொழிகள் ஐரோப்பிய மற்றும் சர்வதேச நாடுகளால் பெரிதும் வரவேற்கப்பட்டன.
சாள்ஸ் ஜெ. போமன்