ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவார்கள் என்ற பயத்தில் புதிய போருக்குத் தயாராகிறார்கள் ஹஸாராக்கள்.

தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டபடி ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்கப் படைகளை வாபஸ் வாங்குவதற்கான தேதியைக் குறித்துவிட்டே பதவியிலிருந்து இறங்கிய டொனால்ட் டிரம்ப், புதிய ஜோ பைடன் அரசுக்கு ஒரு சவாலை விட்டுச் சென்றார். அது மட்டுமில்லாமல் வெளிநாட்டு இராணுவத்தால் ஓரளவு நிம்பதியுடனிருந்த சிறுபான்மையினரான ஹஸாராக்களுக்கும் மீண்டும் ஒரு சவால் ஆரம்பிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

2021 மே மாதத்தில் அமெரிக்க மட்டுமல்ல நாட்டோவின் இராணுவத்தினரும் அங்கிருந்து வெளியேறிவிடவேண்டும் என்பதே ஆப்கானிஸ்தானில் அமைதிக்காக நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளில் தலிபான்களின் கட்டாயக் கோரிக்கை. அதற்காகவே டிரம்ப் அதற்கு ஒப்புக்கொண்டிருந்தார். அதன்படி நாட்டோவின் சார்பில் அங்கிருக்கும் மற்றைய நாட்டினரும் வெளியேறிவிடவேண்டும்.

இந்த நிலைப்பாடு ஆப்கானிஸ்தானில் வாழும் சுமார் 10 – 20 விகிதத்தினரான ஹஸாராக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் அவர்கள் ஷீயா மார்க்க முஸ்லீம்கள், பெரும்பான்மை ஆப்கான்களான சுன்னி மார்க்கத்தினரால் காலம் காலமாக ஓரங்கட்டப்பட்டு வந்தவர்கள். அல் கைதா, ஐ.எஸ் போன்ற சுன்னி இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஹஸாராக்களைக் குறிவைத்து அழிந்துவந்தார்கள். அதை அவர்கள் ஆப்கானிஸ்தானில் மட்டுமன்றிப் பக்கத்திலிருக்கும் பாகிஸ்தானிலும் தொடர்கிறார்கள். 

அதை எதிர்நோக்க மலைகளடர்ந்த ஆப்கானிஸ்தானின் மத்திய பகுதிகளில் வாழும் ஹஸாரா மக்களிடையே நியாயம் கோரும் போராளிகள் என்ற பெயரில் ஒன்று திரண்டு ஆயுதப் போருக்குத் தயாராகி வருகிறார்கள். 

அப்துல் கானி அலிபூர் என்ற பெயருடைய ஹஸாரா மக்களின் தலைவர் பின்னால் பல்லாயிரக்கணக்கான இளவயதினர் போருக்குத் தயாராகிவருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஹஸாரா மக்கள் பெரும்பான்மையாக வாழும் பம்யான் பிரதேசத்தைச் சுற்றியே வேறு பகுதிகளில் வாழும் ஹஸாராக்களும் இடம் பெயர்ந்து வருகிறார்கள். 

தலிபான்களின் கையோங்கியிருக்கும் ஆப்கானிஸ்தானின் பகுதிகளில் வாழும் ஹஸாராக்களைத் தலிபான்கள் கொல்வதும், கடத்திச் சென்று கப்பம் கேட்பதும் போலவே பாம்யான் பிராந்தியத்திலும் ஹஸாராக்கள் தலிபான்களையும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களைக் கடத்திச் சென்று கப்பம் கேட்டுத் தங்களுடைய போருக்காகத் தயாராகி வருகிறார்கள். “வெளிநாட்டு இராணுவம் ஆப்கானை விட்டு வெளியேறும்போது எங்களைப் பாதுகாக்க நாம் தயாராக இருக்கவேண்டும்,” என்று அவர்களின் இயக்கத்தினரிடையே கருதப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *