ஆபிரிக்க நாடுகளில் ஜனநாயக ஆட்சிமுறைக்கு ஆபத்து வந்திருப்பதாக எச்சரித்தார் பிளிங்கன்!

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் ஆரம்பித்திருக்கும் தனது ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தில் முதலில் கென்யாவை அடைந்திருக்கிறார். கென்யாவின் ஜனாதிபதி உஹூரு கென்யட்டாவைச் சந்திக்கமுதல் அவர் நாட்டின் சமூக, மனித உரிமை அமைப்புக்களின் முக்கிய புள்ளிகளைச் சந்தித்தார். அத்தருணத்திலேயே அவர், ஆபிரிக்க நாடுகளில் சமீப காலத்தில் மக்களாட்சியைப் பலவீனப்படுத்தும் சக்திகள் அதீதமாக வளர்ந்திருப்பதைப் பற்றி எச்சரித்தார்.

ஆபிரிக்க நாடுகளில் கென்யா நீண்ட காலமாகவே அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது. ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்றபின் முதலில் வரவேற்ற ஆபிரிக்கத் தலைவர் கென்யட்டா ஆகும். 2017 இல் கென்யாவில் நடந்த பொதுத்தேர்தலின்போது வன்முறைகளும், கலவரங்களும் மலிந்திருந்தன. அதன் பின்னர் கென்யட்டா தனது முன்னாள் எதிரியான ஒடிங்காவுடன் சமாதானம் செய்துகொண்டிருக்கிறார்.

“ஆபிரிக்காவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் மக்களாட்சிக்கு எதிரான அமைப்புக்கள் பலமடைந்து வருகின்றன,” என்று தனது உரையில் குறிப்பிட்ட  பிளிங்கன் அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தில் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர் கூட்டம் நடத்திய அட்டகாசத்தைச் சுட்டிக் காட்டினார். 

மக்கள் தொகையால் ஆபிரிக்காவின் மிகப்பெரிய நாடுகளிலொன்றான எத்தியோப்பியாவில் ஏற்பட்டிருக்கும் உள் நாட்டுப் போர்நிலபரம் பற்றி அமெரிக்கா பெரும் கவலை கொண்டிருக்கிறது. அதை ஆபிரிக்காவில் தனது நட்பு நாடுகள் எம்முறையில் கையாளவேண்டும் என்று கவனிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

கென்யாவை அடுத்து அககண்டத்தில் மக்கள் தொகையால் மிகப்பெரிய நாடான நைஜீரியாவுக்கு விஜயம் செய்யும் பிளிங்கன், செனகலில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொள்வார்.

சாள்ஸ் ஜெ. போமன்