பெலாரூஸ் – போலந்து எல்லையில் தவிக்கும் அகதிகளிடையே கால்களை இழந்த ஒரு 9 வயதுப் பையனுடன் பெற்றோர்.

பெலாரூஸ் மீது ஐரோப்பிய ஒன்றியம் போட்டிருக்கும் தடைகளை நீக்கும்படி சவால்விட்டு பெலாரூஸ் தனது நாட்டினூடாக போலந்துக்குள் பிரவேசிக்க அகதிகளைக் கொண்டுவந்திருப்பது தெரிந்ததே. அதனால், கடந்த ஒரு வாரமாக அவ்வெல்லையில் தவிக்கும் சுமார் 4,000 அகதிகளின் அவல நிலை தொடர்கிறது. சகல வயதினரையும் உள்ளடக்கிய அந்த அகதிகளிடையே கால்கள் அகற்றப்பட்டுச் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்ட ஒரு 9 வயதுப் பையன் தனது பெற்றோர்களுடன் மாட்டிக்கொண்டிருக்கிறான்.

ஈராக்கின் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த 9 வயது தமான் தனது 11 வயது சகோதரன், 7 மாதக் குழந்தைச் சகோதரிகளுடன் அங்கே தனது  பெற்றோருடன் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழையக் காத்திருப்பவர்களில் ஒருவனாகும். சுகவீனமான கால்களுடன் பிறந்த தமானுக்கு உதவ ஜேர்மனிய மருத்துவமனை ஒன்று தயாராக இருந்தது. ஆனால், ஜேர்மனிக்குச் செல்ல விசா கிடைக்காத நிலையில் ஈராக்கிய மருத்துவமனை ஒன்றில் அவனது கால்களைத் துண்டித்துச் செயற்கைக் கால்களைப் பொருத்த வேண்டியதாயிற்று, என்கிறார் தமானின் தந்தை.

தனது மகன் சுதந்திரமாக, நல்ல வாழ்க்கையை வாழக்கூடிய நாடொன்றில் தாம் வாழ விரும்புவதாக அக்குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தாம் டுபாய் வழியாக பெலாரூஸின் மின்ஸ்க் நகருக்கு விமானத்தில் வந்ததாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள். குர்திஷ் பிராந்தியங்களில் பெலாரூஸ் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு விசாக்களை விற்றதாகவும், வெவ்வேறு விமான மார்க்கங்கள் மூலம் அவர்களை மின்ஸ்க் நகருக்குப் பறக்கக் கட்டணத்துடன் பெலாரூஸ் ஒழுங்கு செய்ததாகவும் பல செய்திகள் குறிப்பிடுகின்றன.

தமான் குடும்பத்தினரும், அங்கே நவம்பர் மாத ஆரம்பத்திலிருந்து குவிந்திருக்கும் பல்லாயிரக்கணக்கானோருக்கும் எல்லையைத் திறக்க போலந்து மறுப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறது பெலாரூஸ். போலந்து தன் பங்குக்கு பெலாரூஸ் வேண்டுமென்றே அகதிகளை அங்கே மாட்டவைத்து அரசியல் செய்வதாகச் சுட்டிக்காட்டுகிறது.

பொறுமையிழந்த அகதிகள் பலர் போலந்தின் எல்லை வேலையை நெருங்க முயல்கிறார்கள். அவர்களுக்கும் போலந்தினால் அங்கே குவிக்கப்பட்டிருக்கும் பொலீஸ், இராணுவத்தினருக்கும் இடையே எலியும், பூனையும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அகதிகளில் ஒரு சாரார் போலந்து எல்லையை நோக்கிக் கற்களால் தாக்கியதாகவும் பதிலுக்கு போலந்தின் பொலீசார் அவர்கள் மீது நீரால் பீய்ச்சியடைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

சாள்ஸ் ஜெ. போமன்