கொரோனாப்பரவல் காலத்தில் எல்லைதாண்டிய அளவில் போதை மருந்துகளால் இறந்தோர் தொகை உச்சத்தை எட்டியது.

போதைப்பொருட்களைப் பாவிக்கும்போது அதன் எல்லையைத் தாண்டிய அளவில் எடுப்பவர்கள் திடீர் உபாதைக்கு உள்ளாகி மரணமடைவதுண்டு. அப்படியான மரணங்கள் கொரோனாத்தொற்றுக்கள் பரவிய காலத்தில் அமெரிக்காவில் 100,000 ஐத் தாண்டியிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இருபது வருடங்களாகவே அளவுக்கதிகமான போதைமருந்துப் பாவனையால் இறப்பவர்கள் தொகை அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. 2020 – 2021 இல் அப்படியாக இறந்தவர்களின் எண்ணிக்கை வாகன விபத்து மரணங்கள், துப்பாக்கிச்சூட்டு மரணங்களை ஒன்றுசேர்த்ததை விட அதிகமாக இருந்தது. 

அவ்விறப்புக்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்திருப்பது அமெரிக்காவின் மக்கள் ஆரோக்கிய அமைப்பினர், சமூகசேவை அமைப்பினர், அரசியல்வாதிகளைப் பெரிதும் உசுப்பியிருப்பதாகத் தெரிகிறது. அவர்களில் ஒரு சாரார் இவ்வருடத்தில் அப்படியான இறப்புக்களின் எண்ணிக்கை ஓரளவு குறையும் என்று கணிக்கிறார்கள். இன்னொரு சாராரோ தொடர்ந்தும் அது அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

எதுவாயினும் மக்கள் ஆரோக்கிய சேவையில் மேலும் கவனம் செலுத்தி அதற்கான முதலீடுகளைச் செய்யவேண்டுமென்று கோரப்படுகிறது. அத்துடன் அளவுதாண்டிப் போதை மருந்து பாவித்தவர்கள் மூச்செடுப்பு உறைந்துபோகும் நிலை ஏற்படும்போது உதவக்கூடிய மருந்தான naloxone ஐ தேவையான அளவில் கைவசம் வைத்திருக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்