பணக்காரத் தனியாருக்கான சங்கமொன்றில் அங்கத்துவராகி தடுப்பூசிச் சுற்றுலா செய்யலாம்!
Knightsbridge Circle என்ற பெயரிலான வருடத்துக்கு 40,000 பவுண்ட் அங்கத்துவர் கட்டணம் செலுத்தினால், ஒரு மாத உல்லாசப் பயணத்துடன் இரண்டு தடுப்பூசிகளும் கொடுப்பதாக உறுதி தருகிறார் அதன் ஸ்தாபகரான ஸ்டுவார்ட் மக் நீல்.
தி டெலிகிராப் நிருபருக்கு ஸ்டுவார்ட் அளித்த பேட்டியில் எமிரேட்ஸ் அல்லது இந்தியாவுக்குத் தனது அங்கத்தினர் பயணம் சென்று அங்கே ஒரு மாதம் உல்லாச வாழ்வு வாழ்வதுடன் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ள ஒழுங்கு செய்வதாகக் கூறுகிறார். சங்கத்தின் அங்கத்துவர்களில் 20 விகிதத்தினர் அபு தாபிக்குச் சுற்றுப்பயணம் செய்வதைத் தெரிந்தெடுப்பதாகச் சொல்கிறார்.
அபு தாபியில் இறங்குபவர்களுக்கு உல்லாச விடுதியொன்றில் சகல வசதிகளுடன் தங்க ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. ஓரிரு நாட்களுக்குள் அவருக்கு pfizer/biontech இன் முதலாவது தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. அங்கிருந்து அவர்கள் விரும்பினால் மடகாஸ்கார் போன்ற வேறு சுற்றுலா தலங்களுக்குச் சென்று ஒரு மாதத்துக்குள் திரும்பிவந்து இரண்டாவது தடுப்பூசியையும் அபு தாபியில் பெற்றுக்கொள்வார்.
இரண்டாவது தலமாக இந்தியாவுக்குப் பயணித்து அங்கே அஸ்ரா ஸெனகா நிறுவனத்தினரின் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதுடன் உல்லாச விடுதியில் வாழ ஒழுங்கு செய்துகொடுக்கப்படும் என்கிறார் ஸ்டுவார்ட். இந்தச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்படுகிறவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே என்றும் அதன் காரணம் அவர்களே கொவிட் 19 வியாதியால் பாதிக்கப்படக்கூடிய பலவீனமானவர்கள் என்கிறார் அவர்.
சாள்ஸ் ஜெ. போமன்